
Ahmedabad Air India Flight Crash Update : அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது.
ஏர் இந்தியா விபத்து - 241 பேர் பலி :
இந்தக் கோர விபத்தில், 10 விமானப் பணியாளர்கள், இரண்டு விமானிகள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். ஆச்சரியப்படும் வகையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபர் மட்டும் உயிர் பிழைத்தார்.
விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்த விமானத்தின் கருப்புப் பெட்டி, காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) மற்றும் விமான தரவு ரெக்கார்டர் (FDR) மீட்கப்பட்டன.
இந்த சாதனங்கள், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையை கண்டறிய தேவைப்படும் தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட அறிக்கை தாக்கல் :
ஏர் இந்தியா 171 விமான விபத்து(Air India Flight Accident) தொடர்பான விசாரணையில், முக்கிய முன்னேற்றமாக, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) தனது முதற்கட்ட அறிக்கையை அளித்து இருக்கிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடமும் இந்த அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கிறது.
தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், விமான விபத்துக்கு விமானிகள் காரணமா? அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது பற்றி மத்திய அரசு விரைவில் அறிக்கை வெளியிடும்.
விமான விபத்து குறித்த முழு அறிக்கை வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும்.
=======