இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து மிரளும் அமெரிக்கா: 'மேக் இன் இந்தியா'விற்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவோட உண்மையான பயம் என்ன, இந்தியாவோட ராஜதந்திர நகர்வு என்னன்னு விரிவா பார்க்கலாம்.
America, Intimidated by India’s Growth: Trump Moves to Checkmate ‘Make in India’!
America, Intimidated by India’s Growth: Trump Moves to Checkmate ‘Make in India’!source: ai generated
3 min read

இந்தியாவைப் பார்த்து மிரளும் அமெரிக்கா

சர்வதேச அரசியல்லயும், உலகப் பொருளாதாரத்துலயும் இப்போ ஒரு மிகப்பெரிய வர்த்தகப் போர் வெடிக்கிற சூழல் உருவாகியிருக்கு. வழக்கமா உலக சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருந்த அமெரிக்கா, இப்போ இந்தியாவோட அசுர வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு போயிருக்குன்னே சொல்லலாம்.

முதல்ல, அமெரிக்கா கையில் எடுத்திருக்கிற அந்த சட்ட ஆயுதத்தைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் சமீபத்துல 189 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுருக்கு. அதுல, 1974-ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவைப் பயன்படுத்தி, இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை சுங்க வரி விதிக்க முன்மொழிஞ்சிருக்காங்க.

இந்த 301-வது பிரிவுங்கிறது ரொம்பவே சக்திவாய்ந்த ஒரு வர்த்தக ஆயுதம். ஒரு நாடு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுதுன்னு அமெரிக்கா நினைச்சா, அந்த நாட்டு மேல தன்னிச்சையா வரி விதிக்க இந்தச் சட்டம் அதிகாரம் கொடுக்குது.

அமெரிக்கா விதித்துள்ள வரிகள்

இந்தப் பட்டியல்ல சீனாவுக்கு அதிகபட்சமா 40 சதவீத வரியும், வியட்நாமுக்கு 35 சதவீத வரியும், இந்தியாவுக்கு 25 சதவீத வரியும், மலேசியாவுக்கு 18 சதவீதமும், ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 15 சதவீதமும் இலக்கு வைக்கப்பட்டிருக்கு.

அமெரிக்காவுக்கு ஏன் திடீர்னு இந்தியா மேல இவ்வளவு கோபம்? இதுக்குப் பின்னால 3 முக்கிய காரணங்கள் இருக்கு.

ஒன்றாவது - 'சீனா பிளஸ் ஒன்' உத்தியும் இந்தியாவின் எழுச்சியும்.

கடந்த சில ஆண்டுகளா உலகப் பெருநிறுவனங்கள் எல்லாமே சீனாவை மட்டும் நம்பியிருக்கக் கூடாதுன்னு நினைச்சு, தங்களோட தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாத்திக்கிட்டு வர்றாங்க. குறிப்பா ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில ஐபோன் உற்பத்தியை பல மடங்கு அதிகரிச்சிருக்காங்க.

இதைச் சாத்தியமாக்குனது 2014-ல் தொடங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டமும், 2020-ல் தொடங்கப்பட்ட 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டமான PLI திட்டங்களும்தான்.

மொபைல் போன், மருந்துப் பொருட்கள், ஸ்டீல், சோலார் பேனல்கள், மருத்துவ சாதனங்கள்னு எல்லாத் துறைகளிலும் இந்தியாவை உலக உற்பத்தி மையமா மாத்த பிரதமர் மோடி தீவிரமா செயல்பட்டு வராரு.

ஆனா, அமெரிக்கா இதை எப்படிப் பார்க்குதுன்னா, அரசாங்கமே நேரடியா மானியமும் ஊக்க நிதியும் கொடுத்து உற்பத்தியைப் பெருக்குறது உலக வர்த்தக விதிகளுக்கு எதிரான 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை'ன்னு குற்றம் சாட்டுது. தங்களுக்கு வரவேண்டிய வெளிநாட்டு முதலீடுகளும், தொழிற்சாலை வேலைவாய்ப்புகளும் இந்தியா பக்கம் போயிடுச்சுங்கிற ஆதங்கம் தான் ட்ரம்ப் நிர்வாகத்தோட இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம்.

இரண்டாவது - அமெரிக்காவை பயமுறுத்தும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்.

சும்மா பேச்சுக்காக இல்லாம, புள்ளிவிவரங்களைப் பார்த்தா அமெரிக்கா ஏன் இவ்வளவு பதறுதுன்னு நமக்குத் தெளிவா புரியும்.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்துல, இந்தியாவோட ஒட்டுமொத்த ஜிடிபியில் உற்பத்தித் துறையோட பங்கு சராசரியா 13.5 சதவீதமா இருந்துச்சு. ஆனா உலக வல்லரசான அமெரிக்காவுல அது வெறும் 9.9 சதவீதம் மட்டும்தான். அதேபோல, முதலீடு மற்றும் ஜிடிபி விகிதம் இந்தியாவில 34 சதவீதமா இருந்தப்போ, அமெரிக்காவுல வெறும் 21.6 சதவீதமா மட்டுமே இருந்துச்சு.

தொடர் லாபத்தில் இந்தியா

இதைவிட முக்கியமான விஷயம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உபரி. 2025-ல் உலக அளவுல இந்தியாவுக்கு 309 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தகத்துல இந்தியா தொடர்ந்து லாபத்துலதான் இருக்கு.

2023-ல் 42.5 பில்லியன் டாலரா இருந்த இந்தியாவோட வர்த்தக உபரி, 2024-ல் 45.2 பில்லியன் டாலராகவும், 2025-ல் 57.3 பில்லியன் டாலராகவும் உயர்ந்திருக்கு. அதாவது அமெரிக்கா நமக்கு விக்கிற பொருட்களை விட, நாம அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ற பொருட்களோட மதிப்பு 57 பில்லியன் டாலர் அதிகம்.

இந்தியாவோட ஸ்டீல், சோலார் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் ஐடி துறைகளோட அசுர வளர்ச்சியால, உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதமிருக்குற உபரிப் பொருட்களை இந்தியா மிகக் குறைஞ்ச விலையில அமெரிக்க சந்தையில குவிக்கும். இதனால அமெரிக்க உள்நாட்டுத் தொழிற்சாலைகள் விலைப் போட்டியை சமாளிக்க முடியாம மூடப்படும், அது தங்களோட பொருளாதாரப் பாதுகாப்புக்கே ஆபத்துன்னு வாஷிங்டன் அஞ்சுது.

மூன்றாவது - சீனாவின் மறைமுகப் பாதை என்ற சந்தேகம்

இதுல இன்னொரு முக்கியமான அரசியல் கோணமும் இருக்கு. சீன நிறுவனங்கள் தங்களோட மருந்து மூலப்பொருட்கள், சோலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களையும், முதலீடுகளையும் இந்தியா, வியட்நாம் போன்ற மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி, அங்க முழுப் பொருளா மாத்தி 'மேட் இன் இந்தியா'ங்கிற பெயர்ல அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்றதா ட்ரம்ப் நிர்வாகம் சந்தேகப்படுது.

சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளைத் தப்பிக்க, இந்தியாவை ஒரு மறைமுகப் பாதையா சீனா பயன்படுத்துதோங்கிற சந்தேகமும் அமெரிக்காவுக்கு இருக்கு.

இப்போ மக்களுக்கு வர்ற மிகப்பெரிய கேள்வி?

இந்த 25 சதவீத வரி உடனடியா அமலுக்கு வந்துடுச்சா? இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவாங்களா?

அதுதான் இல்ல. இந்த வரிவிதிப்பு இப்போதைக்கு ஒரு முன்மொழிவு மட்டும்தான், உடனடியா அமலுக்கு வரல. அமெரிக்க சட்ட நடைமுறைப்படி, இது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு 2027 ஜனவரி 5-ஆம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 25-ஆம் தேதி பொது விசாரணையும் நடைபெற இருக்கு.

அதுமட்டுமில்லாம, அமெரிக்கா ஒரு பேச்சுவார்த்தைக் கதவையும் திறந்து வச்சிருக்கு. இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு 'பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை' எட்டிட்டா, 25 சதவீத வரிக்குப் பதிலா 17 சதவீத வரியை மட்டுமே விதிக்கத் தயாரா இருப்பதா அமெரிக்கா அறிவிச்சிருக்கு.

இதற்கான மிகப்பெரிய ராஜதந்திர நகர்வும் வரும் நாட்கள்ல நடக்கப் போகுது. வரும் டிசம்பரில் அமெரிக்காவோட மியாமி நகரத்துல ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கு. இந்த மாநாட்டுல பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேரில் சந்திச்சுப் பேச வாய்ப்பு இருக்கு.

இந்த உயர்மட்ட சந்திப்புல இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டா, இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரிய நிவாரணம் கிடைக்குறதோட, இந்த வரிப் போருக்கும் ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும்னு பொருளாதார வல்லுநர்கள் நம்புறாங்க.

ஆக மொத்தத்துல, ஒரு காலத்துல வளரும் நாடா இருந்த இந்தியா, இன்னைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்காவே வரி போட்டுத் தடுக்க நினைக்கிற அளவுக்கு ஒரு உற்பத்தி சக்தியா வளர்ந்திருக்கு என்பது தான் இதுல இருக்குற மிகப்பெரிய நிதர்சனம்.

===============