

கேரள சட்டமன்ற தேர்தல்
140 உறுப்பினர்களை கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிரசாரம் இரண்டு தினங்களே இருப்பதால், பரப்புரை அனல் பறக்கிறது.
தமிழக தோட்ட தொழிலாளர்கள்
தமிழக- கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளம் செல்வதற்கு மலைச்சாலைகள் உள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், காபி, தேயிலை எஸ்டேட்டுகளில் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
9ம் தேதி வாக்குப்பதிவு
இதற்காக இவர்கள் தினமும் இடுக்கி தோட்டங்களுக்கு சென்று வேலை பார்க்கின்றனர். வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில், 9ம் தேதி கேரள சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தொழிலாளர்கள் வருவதற்கு தடை
கடந்த சில வாரங்களாக மாநில எல்லையில் இரு மாநில அதிகாரிகள் சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. . இதன் ஒருபகுதியாக, கேரளத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.9 மற்றும் அதற்கு முந்தைய நாளான 8 ஆகிய 2 நாட்கள் கேரளாவுக்குள் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வரும் ஜீப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அதேநேரம், வழக்கமான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. வாக்குப் பதிவுக்காக கேரளத்தில் 9ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்று எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் எந்த வேலையும் நடைபெறாது. மேலும் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளில் வெளிமாநிலத்தில் இருந்து அதிகப்படியான ஆட்கள் இங்கு வருவது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
=====