
விண்வெளி ஆராய்ச்சியிலும் சாதனை படைத்து வரும் இந்தியாவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரரான சுபான்ஷூ சுக்லா, ரஷ்யாவில் பயிற்சி பெற்று, விண்வெளியில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
விண்வெளி மையத்தில் சுபான்ஷூ :
அங்கு 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார். காணொலியில் பிரதமர் மோடியுடன் அவர் உரையாடி மகிழ்ந்தார்.
இதனிடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன், ‘ஹாம் ரேடியோ' மூலம் அவர் உரையாடினார்.
113 முறை பூமியை வலம் வந்தார் :
கடந்த 10 நாட்களில் அவர் 50 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை விண்வெளியில் சுபான்ஷூ சுக்லா கடந்துள்ளார்.
ஆய்வுப் பயணம் முடியும் போது அவர் பூமியைச் சுற்றி சுமார் 113 பயணத்தை நிறைவு செய்திருப்பார்.
இதுகுறித்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் சுக்லா. உயிரியல், பூமி அறிவியல், பொருள் அறிவியல் குறித்த 60க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் சுக்லா’’ என்றார்.
விண்வெளி பயணத்தில் சுக்லாவுடன், முன்னாள் நாசா விண்வெளி வீரரான பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி, ஹங்கேரியின் டிபோர் காப்பு சென்று இருக்கிறார்கள். இவர்கள் வரும் 10ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
======