

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை - ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிசும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது வருடாந்திர உச்சிமாநாடு மெல்போர்ன் நகரில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 18 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நெருங்கிய நட்பு நாடுகள்
இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் துடிப்பான ஜனநாயக நாடுகள். முக்கியமாக கடல்சார் சக்திகள். இந்தோ - பசுபிக் பகுதி என்பது இரண்டு பெருங்கடல்கள் சந்திக்கும் ஒரு புள்ளி மட்டுமல்ல.
ஜனநாயக நாடுகள்
இந்தியா - ஆஸ்திரேலியா போன்ற ஒருமித்த எண்ணம் கொண்ட ஜனநாயக நாடுகளின் பகிரப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தக்கூடியது.
இந்தியா - ஆஸ்திரேலியா உறவு, ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு விரிவான சகாப்தத்தில் நுழைந்துள்ளது.
பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளன.
இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை
எரிசக்தி பாதுகாப்பில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக இந்தியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் கைழுத்தாகியுள்ளது.
இந்தியாவுக்கு வலுச்சேர்க்கும்
இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி நோக்கங்களுக்கு பெரும் வலிமையை அளிக்கும். பெங்களூரு மற்றும் குருகிராமில் புதிய பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள் விரிவடைந்ததன் மூலம், கல்வி ஒருங்கிணைப்பு முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 10 லட்சம் இந்தியர்கள்
இரு நாடுகளையும் இணைக்கும் துடிப்பு மிகுந்த சக்தியாக 10 லட்சம் இந்திய புலம்பெயர் சமூகவே விளங்குகிறது. நமது கூட்டு முடிவுகள் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியைப் போல வேகமானவை.
கிரிக்கெட் உடன் ஒப்பீடு
நமது கவனம் ஒருநாள் போட்டியைப் போல கூர்மையானது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ஒரு உன்னதமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் போல ஆழமானது; நீடித்தது“ என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா தொடர்ந்து யுரேனியம் சப்ளை செய்ய முன் வந்து இருப்பதால், இந்தியாவில் அணுசக்தி திட்டங்களை எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து செயல்படுத்த முடியும்.
=================