

பிகார் சட்டமன்ற தேர்தல்
Bihar election CM candidate : பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மகாகத்பந்தன் எனப்படும் இந்தியா கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா, ஜனதா தளம் (ஐக்கிய), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம்பெற்று இருக்கின்றன.
தனித்து போட்டியிடும் பி.கே. கட்சி
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தனில், காங்கிரஸ் கட்சி, தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ-எம்எல்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), ஆகியவை உள்ளன. அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.
என்டிஏ கூட்டணி - இந்தியா கூட்டணி
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு வந்த பிறகும், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் நீடித்தது. பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாடு ஏற்பட்டாலும், பல தொகுதிகளில் ஆர்ஜேடியும், காங்கிரசும் மோதுவது சுவாரஸ்யம் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய சலசலப்பு இருந்தாலும், தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டு உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் நிதிஷும், நரேந்திர மோடியும்.
நிதிஷ்குமார் vs தேஜஸ்வி
பிகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் தேஜஸ்வி, ராகுல் இடையே மோதல் இருந்தாலும், இறுதியில் தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி நிதிஷ் தலைமையில் வெற்றி பெற்று, மேலும் சிறப்பான நல்லாட்சியை கொடுக்கும் என்று பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி தெரிவித்ததன் மூலம் நிதிஷ் மீண்டும் முதல்வராக எந்த எதிர்ப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டது.
அந்த வகையில், நிதிஷ்குமாரும், தேஜஸ்வியும் முதல்வர் நாற்காலிக்கான கோதாவில் நிற்கின்றனர். அனுபவம் வாய்ந்த நிதிஷ்குமார், துணை முதல்வராக இருந்தாலும், இளைஞரான தேஜஸ்வியும் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.
பெண்கள் கையில் வெற்றி, தோல்வி
பிகாரை பொருத்துவரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பெண்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை அமைக்கும் கட்சியை தேர்ந்து எடுக்கும். அந்த வகையில் நிதிஷ்குமார், சலுகைகள், திட்டங்களை செயல்படுத்தி பெண் வாக்காளர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
அவருக்கு போட்டியாக தேஜஸ்வியும் ஆட்சிக்கு வந்தால் என்ற கோஷத்துடன் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கிறார். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, மாதம் 30 ஆயிரம் ரூபாய் உத்தரவாத சம்பளம், பெண்களுக்கு மாதம் 2,500 நிதியுதவி என அவரது பட்டியல் நீள்கிறது.
பிீகார் தேர்தலில் கடும் சவால்
என்டிஏ கூட்டணியை பொருத்தவரை, நிதிஷ்குமார், நரேந்திர மோடி, சிராக் பாஸ்வன் போன்ற வலிமையான தலைவர்கள் பிரசாரத்தை முன்னெடுத்து, வாக்காளர்களை ஈர்த்து வருகின்றனர். இந்தியா கூட்டணிக்காக தேஜஸ்வி சுழன்று, சுழன்று வாக்கு சேகரிக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் இந்தக் கூட்டணிக்காக இன்னும் பிரசாரத்தை தொடங்காமல் உள்ளார்.
முதல்வர் ஆதரவில் இழுபறி
பிகாரை பொருத்தவரை அனுபவம் மிக்க நிதிஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தாலும், தேஜஸ்வி முதல்வராக வேண்டும் என்ற விருப்பமும் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது தேஜஸ்வி முதல்வராக 35 சதவீத ஆதரவு இருக்கிறது. 10 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு 16 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் கூட்டணியை என்ற வகையில், நிதிஷ்குமார் ரேசில் முந்துகிறார்.
யார் முதல்வர்? நவ.14ல் ரிசல்ட்
வரும் நாட்களில் இருவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள், மக்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள், இறுதி முடிவை தீர்மானிக்க போகின்றன. மீண்டும் நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதல்வர் நாற்காலியா? அல்லது இளைஞரான தேஜஸ்வி முதல்வராவாரா என்பது இரண்டு கட்ட தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் மக்கள் அழுத்தும் பொத்தான்கள் மூலம், நவம்பர் 14ம் தேதி விடையாக தெரிய வரும்.
=======