

மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மகளிருக்கு மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 2029 பொதுத்தேர்தலில் இதை செயல்படுத்தும் வகையில், மசோதா கொண்டு வர மத்திய அரசு உறுதியாக உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
இதற்காக நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யப்பட உள்ளது.
மக்களவை எண்ணிக்கை 850 ஆக உயரும்
அதன்படி, மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
மக்களவை, மாநில சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 2023ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
2029 பொதுத்தேர்தலில் இடஒதுக்கீடு
2029 பொது தேர்தலில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் கூட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மக்களவையில் விவாதத்திற்கு வரும் மூன்று முக்கியமான மசோதாக்களில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் ஒன்று. இதற்காக அரசியலமைப்பின் 81வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
எம்பிக்களுக்கு வரைவு மசோதா
சட்ட திருத்தத்தின் வரைவு மசோதா எம்பிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களில் இருந்து நேரடி தேர்தல் மூலம் தேர்வாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வாகும் எம்பிக்களின் எண்ணிக்கை 35 இடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு
இதன்மூலம் மக்களவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும். இந்த மாற்றங்கள் 2029 பொதுத் தேர்தல்களில் இருந்து அமலுக்கு வரும். அதன்பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களிலும், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மாறிவரும் மக்கள்தொகை அமைப்புகளைச் சிறப்பாகப் பிரதிபலிப்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
2011ன் அடிப்படையில் மறுவரையறை
ஆனால், கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு புதிய தொகுதி மறுவரையறை செய்வது இந்த முன்மொழிவின் மையமாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வட மாநிலங்களுக்கு சாதகம்
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருந்த உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை சாதகமாக இருக்கும்.
பிரதமர் வேண்டுகோள்
”மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் இருக்கக்கூடாது. இது இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும். 2029-ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தேசத்தின் உணர்வு” என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தாக்கல் செய்யப்படும் 3 மசோதாக்கள்
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும், பொதுவாக நாரி சக்தி வந்தன் அதினியம் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட்டம்.
2023 திருத்தும் 131வது அரசியல் சட்ட திருத்த மசோதாவாகும். இதில் அரசியல் சட்டத்தின் 81வது பிரிவை திருத்துவதன் மூலம் மக்களவையின் பலம் 543-லிருந்து 816 ஆக உயரும்
மொத்த சட்டமன்ற இடங்கள் 4,123-லிருந்து 6,186 ஆகவும் உயர்த்தப்படும்.
மக்களவையில் சுமார் 280 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
இரண்டாவது மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டை யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தும்.
மூன்றாவது தொகுதி மறுவரையறை மசோதாவாகும்.
===================