

பஞ்சாப் அரசியலில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்திருக்கிறது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக, பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கின்றன.
சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் கைகோர்த்திருக்கின்றன.
பாஜகவும் அகாலி தளமும் பல ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்த கட்சிகள்.
குறிப்பாக, 2007 மற்றும் 2012 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் பஞ்சாப்பில் ஆட்சி செய்திருக்கின்றன.
ஆனால், 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகாலி தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் கூட்டணியை அறிவித்தனர்.
மேலும், அகாலி தளம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்த கூட்டணியில் அகாலி தளம்தான் பெரிய கட்சியாக இருக்கும் என்றும், முதலமைச்சர் பதவி அந்த கட்சிக்கே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் அகாலி தளமும் தனித்தனியாக போட்டியிட்டன.
மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில், அகாலி தளம் 3 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
தற்போது மீண்டும் இணைந்துள்ள பாஜக – அகாலி தளம் கூட்டணி, ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் சவாலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
=====================