

பிகார் சட்டமன்ற தேர்தல்
Nitish Kumar Video on Rashtriya Janata Dal : 43 தொகுதிகளை கொண்ட பிகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக வரும் 6 -ந்தேதி மற்றும் 11-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எஹண்ணிக்கை நவம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது. பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்டிரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி அமைத்துள்ளது.
நிதிஷ்குமார் காணொளி வெளியீடு
இந்நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி 'காட்டு ராஜ்ஜியம்' என்று கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தனது அரசாங்கத்தின் கடந்த இரண்டு தசாப்த கால சாதனைகளை அவர் எடுத்துரைத்து உள்ளார்.
மக்களுக்கான அனைத்து பணிகளையும் நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செய்ததாக அவர் கூறியள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என்று கடுமையாக சாடிய நிதிஷ்குமார், NDA அரசாங்கம் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பாடுபட்டதாக கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சி கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது. முதலாவதாக, அதை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலைமை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ஆரம்பத்திலிருந்தே, அனைத்து பிரிவு மக்களின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். முன்பெல்லாம் பீகாரி என்று அழைக்கப்படுவது அவமானம். ஆனால் இப்போது அது மரியாதைக்குரிய விஷயம்.
பிரதமர் மோடியால் வளர்ச்சி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பீகாரின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஆதரவையும் அளித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே பீகாரை மேம்படுத்த முடியும். மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் இருவருமே ஆட்சி செய்வதால் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய நிதிஷ் குமார், கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் பீகார் மேலும் வளர்ச்சியடையும். எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்.
பீகார் மாநிலத்தை முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் நாங்கள் அதை மேம்படுத்துவோம். எனவே, தயவுசெய்து அதிகபட்ச எண்ணிக்கையில் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.