

முகமது அசாருதீன் :
BJP Oppose Mohammad Azharuddin As Telangana Minister : இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த முகமது அசாருதீன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மூன்று முறை இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். 2000-மாவது ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சியில் அசாருதீன்
2012ம் ஆண்டு வாழ்நாள் தடை நீக்கப்பட்டதால், 2019ம் ஆண்டில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவரானார் அசாருதீன். முன்னதாக 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அசாருதீன் பிப்ரவரி 19, 2009 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
தெலங்கானா அரசியலில் அசாருதீன்
2018ல் தெலங்கானா காங்கிரஸ் குழுவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அசாருதீன், 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் இருந்து போட்டியிட்டார், ஆனால் பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.
தெலங்கானா அமைச்சரானார் அசாருதீன்
இந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தெலங்கானாவில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் அசாருதீனுக்கு இடம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆளுநர் பதவிப் பிரமாணம்
ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அசாருதீனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இதுவரை முஸ்லீம்கள் யாரும் இடம் பெறவில்லை. எனவே, அந்த வாய்ப்பு அசாருதீனுக்கு கிடைத்து இருக்கிறது.
பாரதிய ஜனதா எதிர்ப்பு
அதேசமயம், இதன் பின்னணியில் சுவாரஸ்மான கதை ஒன்றும் இருக்கிறது. அசாருதீன் அமைச்சராக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காரணமும் இதுதான். ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 14ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இங்கு முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம், அவர்களை கவர்வதற்காகவே அசாருதீன் அமைச்சராக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர் வி. நவீன் யாதவ், பிஆர்எஸ் கட்சி சார்பில் மரணமடைந்த கோபிநாத்தின் மனைவி சுனிதா, பாஜக வேட்பாளராக லங்காலா தீபக் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
சிறுபான்மை வாக்குகளை ஈர்க்கும் விதமாக அசாருதீன் அமைச்சராக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இருக்கும் பாஜக, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறது.
மக்களுக்கு சேவையாற்றுவேன் - அசாருதீன்
தனது பதவியேற்பை இடைத்தேர்தலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் அசாருதீன், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் மேலிடம், பொதுமக்கள் மற்றும் எனது ஆதரவாளர்களுக்கு நன்றி. நான் அமைச்சரானதுக்கும் ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் படிக்க : வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி-விராட் கோலி வாழ்த்து!
இரண்டும் வெவ்வேறு விஷயங்கள், அவற்றை இணைக்கக் கூடாது. எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக நேர்மையாக உழைப்பேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.
--------------