

நவம்பர் 18-ம் தேதி பஞ்சாபின் ஜலந்தரில் தொடங்கிய இந்த யாத்திரை, டிசம்பர் 3-ம் தேதி வாரணாசியில் நிறைவடைகிறது.
16 நாட்களில் 2,402 கி.மீ. பயணித்து, 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாகச் செல்லும் இந்த யாத்திரையில் 100-க்கும் மேற்பட்ட சிறிய பொதுக்கூட்டங்களும், 17 முக்கிய நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் சுமார் 32% பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக ஜலந்தர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட தோவாபா பகுதிகளில் ரவிதாஸியா சமூகத்தினரின் செல்வாக்கு அதிகம்.
2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றைக்கூட வெல்லவில்லை.
இதனால் இந்த சமூகத்தின் ஆதரவை பெற பாஜக தீவிரமாக முயற்சி செய்கிறது.
உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் 2027-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தலித் வாக்காளர்களை அணுகுவதில் பாஜக கூடுதல் கவனம் செலுத்துகிறது.
குரு ரவிதாஸின் சமத்துவ கருத்துகளை முன்னிறுத்தி, சமூக நல்லிணக்க யாத்திரையாக இதை பாஜக நடத்தினாலும், தேர்தல் அரசியலில் தலித் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
சாந்த் ரவிதாஸின் 650-வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் இந்த யாத்திரை, அவரது சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்க கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாஜக கூறுகிறது.
அதே நேரத்தில், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் யாத்திரையை முன்னெடுப்பது, 2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த சமூகத்தினரின் ஆதரவை பெறுவதற்கான பாஜகவின் அரசியல் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.
====================