FCRA: வெளிநாட்டுப் பங்களிப்பு திருத்த மசோதா : மத்திய அரசு தீவிரம், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு : முழு விவரம்..!

வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்த, கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தை மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
Central Governments keen to pass the legislative amendment introduced to regulate foreign funding and donations
Central Governments keen to pass the legislative amendment introduced to regulate foreign funding and donations Ai generated
2 min read

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை

இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற்று வருகின்றன. சமூகம் சார்ந்தும், மதம் சார்ந்தும் நன்கொடைகள் பெறப்படுகின்றன.

பார்ப்பதற்கு இவை சாதாரண நன்கொடை போன்று இருந்தாலும், சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டால், அது நமது நாட்டிற்கே பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

நிதிவரவை கண்காணிக்க முடிவு

எனவே, இதை கண்காணித்து முறைப்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதாவது என்ஜிஓக்கள், வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கும், அவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் சில விதிகளை கடுமையாக்கி கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா

இதற்காக, வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால்,

பதிவு கட்டாயம்

வெளிநாட்டு நிதி, நன்கொடை பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் எப்சிஆர்ஏ சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான், வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான அனுமதி கிடைக்கும்.

மத்தியில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, எப்சிஆர்ஏயில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை 41,759 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிகை 5,353.

தற்போது, எப்சிஆர்ஏவில் பதிவு செய்து நாடு முழுவதும் 14,437 அமைப்புகளும் தமிழ்நாட்டில் 2,102 அமைப்புகளும் மட்டுமே உள்ளன. இவை வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று சமூக சேவைகளை ஆற்றி வருகின்றன. கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் இவற்றின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது.

சட்டத் திருத்த மசோதா

மழைக்கால கூட்டத் தொடரில் இந்த திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் FCRA-ஐ கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இது சிறுபான்மை மக்கள் நலனை பாதிக்கும் என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் தடுக்கவே, நாடாளுமன்ற கூட்டத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வரும் 13ம் தேதியோடு மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைய இருக்கிறது.

இந்தச்சூழலில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குபடுத்தும் திருத்த சட்டத்தில் இடம்பெற்று இருக்கும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

இந்த திருத்த மசோதா, கடந்த மார்ச் 25ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதோடு தொடர்புடைய FCRA விதிகள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன.

இந்த சட்டமானது உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. FCRA பதிவு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். காலாவதி ஆவதற்கு முன்பாகவே அது புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படி செய்யாததால் 22,496 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

2019 முதல் 2022க்குள் 13,520 நிறுவனங்கள் 55 ஆயிரத்து 741 கோடி ரூபாய் வெளிநாட்டு பங்களிப்பாக பெற்றுள்ளன

விதிமீறலுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் அபராதம் அப்படியே நீடிக்கிறது.

நன்கொடை பெற்றது தொடர்பாக எந்த விசாரணையை தொடங்க வேண்டும் என்றாலும், மாநில முகமைகள், மத்திய அரசின் முன் அனுமதி அவசியம்.

ஒரு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டால், ஒப்படைக்கப்பட்டால் அல்லது நிறுத்தப்பட்டால், வெளிநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட சொத்துக்களை பொறுப்பேற்கவும், நிர்வகிக்கவும் மற்றும் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பு உருவாக்கப்படும்.

அதன்படி, முதலில் சொத்துக்கள் தற்காலி நிலைக்கு மாற்றப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் சரியான நேரத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல் அல்லது மீட்டெடுப்பைப் பெறத் தவறினால் மட்டுமே அவை நிரந்தரமாக முடக்கப்படும்.

புதுப்பித்தலுக்கு கோரவில்லை என்றால், மறுக்கப்பட்டால், காலாவதியாவதற்குள் முடிக்கப்படா விட்டால், சான்றிதழ் செயலிழந்ததாக கருதப்படும்.

எனவே, முன் அனுமதியுடன் பெறப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பெறப்பட வேண்டும். சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

முக்கியப் பொறுப்பாளர் என்பது, இயக்குநர்கள், கூட்டாளிகள், அறங்காவலர்கள், நிர்வாகத்தின் மீது கட்டுப்பாடு கொண்ட பிறரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது;

எந்தெந்த மதச் செயல்பாடுகள் வெளிநாட்டு நிதியுதவியைப் பெறலாம் என்பதை இந்த விதிகள் முதல் முறையாக தெளிவாக தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி எந்தவொரு கட்டாய அல்லது தூண்டுதல் அடிப்படையிலான மதமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சாராத வெளிநாட்டைச் சேர்ந்த யாரும் தொண்டு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இருக்க அனுமதி கிடையாது போன்ற முக்கிய அம்சங்கள் சட்டத் திருத்த மசோதாவில் இடம்பெற்று இருக்கின்றன.

மசோதா நிறைவேறுமா?

உள்நாட்டு பாதுகாத்து, வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதாவின் இலக்கு என்கிறது மத்திய அரசு. சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினரின் செயல்பாடுகளை முடக்குவதே மத்திய அரசின் நோக்கம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தச்சூழலில் நடப்பு கூட்டத்தொடரில் திருத்த மசோதா மீது விவாதம் நடைபெற்று, நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in