

பிகார் தேர்தல் முடிவுகள்
Nitish Kumar Take Oath as Bihar CM for Record 10th Time : 243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 14 ஆம் தேதி நடந்த நிலையில், பாஜக மற்றும் நிதிஷின் ஜக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
என்டிஏ வரலாற்று வெற்றி
இந்தக் கூட்டணிக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், அமோக வெற்றி என்டிஏ கூட்டணிக்கு கிடைத்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் படுதோல்வி
எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்து உள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. 233 தொகுதிகளில் டெபாசிட்டை அந்தக் கட்சி பறிகொடுத்தது.
10வது முறை முதல்வராகும் நிதிஷ்
மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராக என்டிஏ கூட்டணி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 10வது முறையாக பிகார் முதல்வராகிறார் நிதிஷ். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மோடி, அமித்ஷா
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள்
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்பட பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்டிஏ தலைவர்களுக்கு அழைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிகார் அமைச்சரவை
6 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற அளவில் அமைச்சரவை இருக்கும் எனத் தெரிகிறது. அதன்படி பாஜகவுக்கு 15 அமைச்சர்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 13 அமைச்சர்கள், சிராக் பஸ்வான் கட்சிக்கு 3 அமைச்சர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மக்கள் தலைவர் நிதிஷ்குமார்
10வது முறை முதல்வர் 20 ஆண்டுகளாக முதல்வர் என்ற வகையில், நவீன் பட்நாயக், ஜோதி பாசுவின் சாதனையை சமன் செய்கிறார் நிதிஷ்குமார். இவர் செயல்படுத்திய திட்டங்கள் தேர்தலில் 78 சதவீத பெண்கள் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க உதவியது.
======