

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒருமுறை அவர் டெல்லி சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அவர் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.
டெல்லியில் முதல்வர் விஜய்
இந்தநிலையில், மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். இந்தப் பயணம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
சோனியா, ராகுலுடன் சந்திப்பு
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் முதல்வர் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்கிறார். தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற்று இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தலைமை அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு
மாலை 5:30 மணி அளவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை முதல்வர் விஜய் சந்திக்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, நடைபெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருக்கும்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களையும் சந்திக்க இருக்கிறார் முதல்வர் விஜய். நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில், அவர் சந்தித்து வாழ்த்து பெறுவது மரபாக இருந்து வருகிறது.
நிதி ஆயோக் கூட்டம் (NITI Aayog Meeting)
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் முதல்வர் விஜயும் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைப்பார்.
நிதி ஆயோக் என்பது மத்திய அரசின் ஒரு கொள்கை சிந்தனைக் குழு (Policy Think Tank) ஆகும். கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Federalism): மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தவும், கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும் இது ஒரு முக்கிய தளமாகச் செயல்படுகிறது.
மாநிலங்களின் கருத்துக் கேட்பு
மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்தின் எதிர்பார்ப்பு என்ன, அங்குள்ள உள்ளூர் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு முடிவெடுக்க இக்கூட்டம் உதவும்.
மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பிற மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதன் மூலம் சுமூக உறவை வலுப்படுத்திக் கொள்ள நிதி ஆயோக் கூட்டம் வழி வகுக்கும்.
பிரதமரின் சிறப்பு விருந்து
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி தரப்பில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார்.
தவெகவின் அமோக வெற்றி
தமிழக தேர்தலில் தவெகவிற்கு கிடைத்து இருக்கும் வெற்றி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை இமாலய வெற்றியாகவே ஊடகங்கள் கருதுகின்றன.
வலிமை மிக்க திராவிட கட்சிகளை முதல் தேர்தலிலேயே வீழ்த்தி, ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கிய திமுக கூட்டணியை உடைத்து, அவர்கள் ஆதரவோடு ஆட்சி அமைப்பது சாதாரண விஷயம் கிடையாது.
எனவே, முதல்வர் விஜயின் டெல்லி பயணம், சந்திக்கப் போகும் தலைவர்கள், நடத்தப்படும் பேச்சுவார்த்தை அனைத்தும் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூன்று நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்து கொண்டு, வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகிறார் முதல்வர் விஜய்.
=============