

Parliament Monsoon Session Adjourned Opposition Chaos NEET Paper Leak
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21-07-2026), எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவையில் இன்று (21-07-2026) நடந்தவை
காலை 11 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடி, கேள்வி நேரத்துடன் தொடங்கிய நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்ட வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர்.
அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை
அமளி தீவிரமடைந்ததால் அவையை முதலில் பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் 12 மணிக்கு சந்தியா ராய் தலைமையில் அவை மீண்டும் கூடியபோதும் அமளி அடங்காததால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நடந்தவை
துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது.
கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
முதலில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். பின்னர் கார்கேவும் அவைக்கு நன்றி தெரிவித்தார்.
நீட் விவகாரம் மற்றும் டெல்லி போராட்டம்
இதையடுத்துப் பேசிய கார்கே, நீட் தேர்வு எதிர்ப்புக் குரல்கள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் டெல்லி சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவையும் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
=====