

Cockroach People's Party protest in Delhi? Accumulation of more than 1000 police!
'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி'
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, இன்று டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் பின்னணி என்ன?
முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் முக்கியத் தலைவரான அபிஜித் திப்கே, தான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வீடியோ வெளியீடு
மேலும், டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவியை வலியுறுத்தி, அமைதியான முறையில் இன்று ஒரு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை அனுமதி மறுப்பும் தீவிர பாதுகாப்பும்
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தங்களது போராட்டத்திற்கு காவல்துறையிடம் முறையான எந்தவொரு அனுமதியையும் இதுவரை பெறவில்லை.
டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு
எனினும், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும், போராட்ட அறிவிப்பையும் கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக, புது டெல்லி மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா விளக்கம்
மேலும் இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அசுதோஷ் ரங்கா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"எங்கள் தலைவர் அபிஜித் திப்கே இந்தியா வந்தடைந்து விட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என நாங்கள் திடமாக நம்புகிறோம். அவர் விரைவில் மக்கள் முன்னிலையில் வருவார்.
அமைதி போராட்டம் நடத்துவோம்
அதன் பிறகு நாங்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்று போராட்டத்திற்கான முறையான அனுமதியைக் கோருவோம். அனுமதி கிடைத்தவுடன் ஜந்தர் மந்தர் பகுதியில் எங்களது அமைதி போராட்டத்தை நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
===