
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு :
Coimbatore Perumal Mudi Temple on Purattasi 4th Saturday 2025 : இறைவன் உறையும் கோவில் என்றால், நாள்தோறும் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு என பூசைகள் நடந்தவாறே இருக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொருந்தும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால், அந்த மாதம், பெருமாள் கோவில்களில் வழிபாடுகள் களை கட்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்து பெருமாளை சேவித்து செல்வார்கள்.
பெருமாள் முடி மலை கோவில் :
ஆனால், புரட்டாசி சனிக்கிழமை மட்டும் அதாவது நான்கு சனிக்கிழமை அல்லது 5 சனிக்கிழமை மட்டும் வருடத்தில் பக்தர்கள் செல்லும் கோவில் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. வியப்பை ஏற்படுத்தும் இந்த ஆன்மிகத் தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதுதான் பெருமாள் முடி மலை கோவில்.
சுயம்பு வடிவில் பெருமாள் :
குளுகுளு காற்று, எங்கு பார்த்தாலும் பசுமையான சூழல், மலையில் இருந்து கீழே பார்த்தால் உலகமே சிறிய பொம்மை போல காட்சி அளிக்கும் கனவு தேசம் தான் பெருமாள் முடி கோவில். ஆன்மிக பயணமாக மலை மேல் ஏறி பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்ம் இங்கு செல்ல வருடத்திற்கு 5 சனிக்கிழமைகள் மட்டுமே அனுமதி கிடைக்கும். அதன்படி, புரட்டாசி மாதம் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று சுயம்பு வடிவில் உள்ள பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
வனப்பகுதியை கடக்க வேண்டும்
ஆனைகட்டி பகுதியின் முக்கிய ஆன்மிக தலமாக உள்ள பெருமாள் முடி கோவிலுக்கு, மாங்கரை வனச் சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும். அதிகாலையிலேயே புறப்பட்டால் தான், காலை 7 மணிக்கு மேல் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி கிடைக்கும்.
முதலில் பிள்ளையார் வழிபாடு
சிறிது தூரம் வாகனங்களில் பயணம் பின்னர், கரடு முரடான சாலையில் செல்ல வேண்டும். அங்கிருந்து வனப்பகுதி வழியாக மலையேற வேண்டும். ஒத்தையடிப் பாதையில் தொடங்கும் ஆன்மிக பயணத்தில், முதலில் வருவது பிள்ளையார் கோவில். கணபதியை வணங்கி மலையேற்றத்தை தொடங்க வேண்டும்.
பிரமிக்க வைக்கும் பெருமாள் முடி மலை
அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பார்க்கும் போது, பச்சை பசேல் என 5,300 அடி உயரம் கொண்ட பெருமாள் முடி மலை பிரமிப்பை ஏற்படுத்தி, பக்தி பரவசம் தரும். தொடக்கத்தில் மண் சாலை, பின்னர் செங்குத்தான பாறைகள் இடையே செல்வது என ஒரு மணி நேரம் மலையேறினால் சமதளமான பாறை வரும். தூரத்தில் மலை முழுவதும் புற்களால் நிரம்பி கணகளுக்கு விருந்து படைக்கும்.
சுயம்பு வடிவில் பெருமாள்
கடைசி மலையான கிரி மலையை அரை மணி நேர பயணத்திற்கு பிறகு அடைந்தால், சுமார் 40 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பாறையில் நாமம் வரையப்பட்டு அதை சுற்றிலும் வேல்கள் நடப்பட்டு இருக்கும். அங்கு பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபடுவதை பார்க்கலாம். ஒரே பாறையில் சுயம்புவாக வீற்றிருக்கும் பெருமாள், அழகிய கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்களுக்கு இணையாக பெண்களும், குழந்தைகளும் கடினமான மலையேற்றத்தை கடந்து பெருமாளை தரிசிக்க வருவது, பக்தியின் உச்சநிலை.
மேலும் படிக்க : புரட்டாசி 3வது சனிக்கிழமை இதை செய்யுங்கள் - மோட்சம் கிடைக்கும்!
பக்தர்கள் நேர்த்திக்கடன்
வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் சிறு வயது முதலே பெருமாள் முடி கோவிந்தனை தரிசித்து வருபவர்கள். ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பெருமாளை தரிசிப்பதை நேர்த்திக் கடனாக அவர்கள் வைத்து இருக்கிறார்கள். யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் காரணமாக ஆண்டு முழுவதும் இந்த மலைக்கு வர பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்குவது கிடையாது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், சனிக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது. வருடத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் கோவில் இது மட்டுமே. புரட்டாசி சனிக்கிழமை அன்று நம்மால் போக முடியா விட்டாலும், வீட்டில் இருந்தவாறே பெருமாள் முடி திருமாலை சேவித்து, அவரது அருளை பெருவோமாக.
================