

கேரள சட்டசபை தேர்தல்
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) கடும் போட்டி நிலவியது.
மும்முனைப் போட்டி
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கூட்டணி
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் யுடிஎஃப் கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் 63, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்எஸ்பி 3, ஆர்ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை
அறுதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.
10 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி
இதற்கு முன்பு யுடிஎஃப் கூட்டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.
மூத்த தலைவர்கள் வெற்றி
கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் போட்டியிட்டார். அவர் இம்முறை 68,184 வாக்குகள் பெற்று மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
முதல்வர் ரேசில் சதீஷன்
கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் இம்முறை பரவூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் மொத்தம் 78,658 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பினராயி விஜயன் வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் 35 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 85,614 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பாஜக 3 இடங்களில் வெற்றி
இந்தத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள நெமோன், கழக்கூட்டம், சத்தன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
நெமோன் தொகுதியில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார்.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான வி. சிவன்குட்டியை 3,590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கழக்கூட்டம் தொகுதியில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரான வி. முரளீதரனும் வெற்றி பெற்றார்.
கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத மாநிலங்கள்
50 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும்.
2011ல் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேபோன்று, திரிபுராவில் 2018ம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், கேரளாவிலும் இடதுசாரிகள் ஆட்சியை பறிகொடுத்து இருக்கின்றன.
முதல்வர் பதவி - நான்கு பேர் போட்டி
முதல்வர் பதவிக்கு போட்டியாக 4 பேர் இருந்தபோதிலும் வி.டி.சதீஷன் இந்தப் போட்டியில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் வி.டி.சதீஷனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
==========