

ஆட்சியில் திரிணாமூல் காங்கிரஸ்
No Alliance, Congress To Go Solo In All 294 Seats Of West Bengal Assembly Election 2026 : மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று முறை வெற்றி பெற்ற திரிணாமூல் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
அக்கட்சியின் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து வருகிறது. பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.
ஒருகாலத்தில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இடதுசாரிகள் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியோ காணாமல் போகும் நிலையில் உள்ளது.
தனித்து களம் காணும் காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இதுவரை இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களமிறக்கி தனித்து களம் காண காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் வாக்கு வங்கி 3%
டெல்லியில் மேற்குவங்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன், கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நடத்திய ஆலோசனையின்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2001சட்டமன்றத் தேர்தலில் 26 இடங்களில் வென்ற காங்கிரஸ், 2006 தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றியது.
2011இல் 42 இடங்களிலிலும், 2016 தேர்தலில் 44 இடங்களிலும் காங்கிரஸ் வென்ற நிலையில், 2021 தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இதன்காரணமாக கட்சியின் வாக்கு வங்கி 3.03 சதவீதமாக குறைந்தது.
இடதுசாரி கூட்டணி தேவையில்லை
இடதுசாரிகளுடனான கூட்டணியால் கட்சியின் சொந்த அடையாளத்தை இழந்து வருவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை மீட்க முடியும் என்பதால் இந்த முடிவினை எடுத்து வருகிறது.
மேற்குவங்கத்தில் பாஜக வளர்ச்சி
பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை, 2001, 2006, 2011 தேர்தல்களில் மேற்குவங்கத்தில் அக்கட்சி ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.
ஆனால், 2016ல் 3 இடங்களில் வென்றது. அதன் தொடர்ச்சியாக 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்தமுறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
மூன்று முறை தொடர்ந்து திரிணாமூல் ஆட்சியில் இருப்பதால், மக்களும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.
மேற்குவங்கத்தில் 4 முனைப்போட்டி
காங்கிரஸின் முடிவால், மேற்கு வங்கத்தில் நான்கு முனைப்போட்டிக்கு வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து, தங்களுக்குச் சாதகமாக அமையும் என பாஜகவினர் கருதுகின்றனர்.
காங்கிரஸின் முடிவு, திரிணாமூல் காங்கிரசுக்கு சரிவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
சாதிக்குமா காங்கிரஸ்?
வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் காங்கிரஸ் இந்த தேர்தலில் வாகை சூடுமா அல்லது 2021 போல பூஜ்யமாகி நிற்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.
===================