

ஈரான் சண்டை
cooking gas shortages are increasing across the country due to the Iran war, the central government has decided to prioritize housing :
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் என்றால் மறுபக்கம் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு.
எரிபொருள் தட்டுப்பாடு
இந்தப் போரின் தாக்கம் இப்போது வீடுகளின் சமையலறை வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் இப்படி என்றால், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் பொதுப் போக்குவரத்தும் முடங்கும் நிலை வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
மூடப்படும் ஓட்டல்கள்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஒரு சில இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், இதேநிலை தொடர்ந்தால், ஓரிரு நாட்களில் ஓட்டல்களே இயங்காத சூழல் தான் உருவாகும்.
தத்தளிக்கும் தேநீர் கடைகள்
தேநீர் கடைகளும் சிலிண்டர்கள் கிடைக்கா விட்டால், மூடுவதை தவிர வேறு வழியில்லை. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும். பேக்கரிகளும் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை
இந்நிலையில், வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான உற்பத்தி பணி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறை நீடிக்கும்
நார்வே, அமெரிக்கா போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது. அவை கப்பல் மூலம் இந்தியா வந்து சேர 2 மாத காலம் பிடிக்கும். எனவே, பற்றாக்குறை என்பது சில காலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
80% எரிவாயு இறக்குமதி
இந்தியாவில், எல்பிஜியைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது.
ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.
ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை.
பொதுவாக இந்தியாவிடம் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
33 கோடி வீடுகளுக்கு எரிவாயு சப்ளை
நாடு முழுவதும் 33 கோடி வீட்டு உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாடு முழுவதும் 70.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகத்தில் வீடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
============