
துணை ஜனாதிபதி தேர்தல் :
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் உடல்நிலையை காரணமாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் :
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவரை கூட்டணி கட்சி எம்பிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கட்சி வேறுபாடின்றி அனைவரும் சிபிஆர்-ஐ ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி :
ஆனால், இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டது. இறுதியாக அந்தக் கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பொறுப்பு வகித்தவர். இவர் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார்.
சிபிஆர் வேட்புமனு தாக்கல் :
இந்தநிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்களும் இதில் கலந்து கொண்டனர்.
என்டிஏவுக்கு போதிய பலம் :
செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் டெல்லியில் நடைபெறுகிறது. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது. மேலும் சில கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது
====