

கரையை கடந்த மோந்தா
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அதன் திசை மாறியதால், ஆந்திரா நோக்கி சென்றது. தீவிர புயலாக நேற்று வலுப்பெற்ற மோந்தா, மாலை காகிநாடா அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்றானது சுழன்று அடித்தது.
கடலோர மாவட்டங்களில் கனமழை
ஆந்திராவின் 12 கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் இடிந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நீரில் மூழ்கின. நெல்லூர் முதல் ஒடிசா எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் வரை 12 கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடற்பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மண்சரிவு, மின்கம்பங்கள் முறிந்தன
குறிப்பாக காக்கிநாடா, மசிலிபட்டினம், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட ஏனாம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது. பல இடத்தில் மண்சரிவும், ஏற்பட்டது. புயல் கரையை கடந்த காகிநாடா பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கொந்தளித்த கடல் பகுதி
கடல் கொந்தளிப்பால் கரையோரத்தில் உள்ள கற்கள் சாலைகளில் வந்து விழுந்தன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. மழைக்கு இதுவரை 2 பேர் மட்டுமே பலியானதாக, ஆந்திர அரசு தெரிவித்தது.
விமானம், ரயில் சேவை ரத்து
புயல் காரணமாக ஆந்திரா - தமிழகம் - ஒடிசா இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. விசாகப்பட்டினத்தில் இருந்து விமானங்களும் இயக்கப்படவில்லை.
ரூ.2,200 கோடிக்கு இழப்பு
மோந்தா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அதிகாரிகளை கேட்டறிந்தனர். ஓடைகள் நிரம்பி வழியும் பகுதிகளில் எச்சரிக்கையுடன் கண்காணிக்கவும், புயல் சேத மதிப்பை கணக்கிடவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு இருக்கிறார். முதற்கட்ட மதிப்பீட்டின் படி 2,200 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.