

டெல்லியில் குண்டு வெடிப்பு
Delhi Car Blast Today Update in Tamil : டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று மாலை 6.30 மணி அளவில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக அருகே இருந்த ஏராளமான கார்கள் தீயில் எரிந்தன.
12 பேர் பலி, 20 பேர் படுகாயம்
இந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. மற்ற பெருநகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூக்கி வீசப்பட்ட கார்கள்
இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விளக்கிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா, “மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த வெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.
வெடிகுண்டுகளுடன் வந்த காரா?
கார் வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அருகில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததால், வெடிகுண்டுகளுடன் அந்த கார் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
அமித் ஷா உறுதி
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்வார்’ என்று தெரிவித்தார்.
மூளையாக செயல்பட்ட உமர் முகமது
டெல்லி கார் வெடிப்பில் மருத்துவர் ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்திருக்கிறது. காஷ்மீரை சேர்ந்த 36 வயதாக உமர் முகமது(Umar Mohammed Delhi Car Blast) இந்த வெடிப்பினை அரங்கேற்றி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் காரில் இருந்தாரா? அல்லது குண்டு வெடிப்புக்கு முன்னதாக இறங்கி தப்பிச் சென்றாரா? எனத் தெரியவில்லை. புல்வாமாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார்
வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட Hyundai i20 கார், ஹரியானா வழியாக டெல்லிக்குள் வந்தது தெரிய வந்துள்ளது. அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் மற்றும் சில வெடி மருந்துகளை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
360 கிலோ வெடிப்பொருட்கள்
ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச காவல்துறையினர் ஃபரிதாபாத்தில் மேற்கொண்ட ஒரு சோதனையில் 360 கிலோ வெடிப் பொருட்களை கைப்பற்றினர். மருத்துவர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இவை பறிமுதல் செய்யப்பட்டன. இது நடந்த சில மணி நேரத்தில் டெல்லியில் கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது, திட்டமிட்ட சதி செயலா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
உச்சக்கட்ட பாதுகாப்பு
டெல்லி கார் வெடிப்பை அடுத்து மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர வாகன சோதனை
ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
====================