

பொதுத்தேர்தல் - காங்கிரஸ் இலக்கு
5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மேலும் பல மாநிலங்கள் அடுத்த ஆண்டு தேர்தலை சந்தித்த இருக்கின்றன. 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
அதற்காகவே திமுகவின் நெருங்கிய கூட்டணி, நட்பை உடைத்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு தந்தது காங்கிரஸ். 59 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அங்கம் வகித்துள்ளது.
6 மாநிலங்களில் அதிரடி
இந்தநிலையில், 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய மேலிடம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 6 மாநிலங்களில் தலைவர்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பிரச்னை எங்கே வருகிறது என்றால், தமிழகத்தில் மாநில தலைவரை மாற்றினால் கட்சி உடையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல்கள், கர்நாடகாவில் சுமூகமாக நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, மாற்றங்களை செய்ய மேலிடம் முனைப்பாக உள்ளது.
கோவா செல்லும் சோடங்கர்
ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பவும், 2022ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பதவியை துறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கருக்கு மீண்டும் கோவா பொறுப்பு வழங்கவும் ஆலோசனைகள் நடந்துள்ளன.
இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு
ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நடத்திய சந்திப்பில், பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இளம் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
தமிழக காங்கிரஸ் - யார் தலைவர்?
தமிழகத்தில் செல்வபெருந்தகையை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இளம் தலைவர் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம்.
தமிழக காங்கிரஸ் உடையுமா?
தமிழகத்தில் மாநில தலைவரை மாற்றும் பட்சத்தில் பெரிய அளவில் கட்சிக்குள் மோதல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக உள்ள சில மாவட்டத் தலைவர்கள் மாநில நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கையில் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால் தமிழக காங்கிரஸ் இரண்டாக உடையும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.