

தேசிய முற்போக்கு திராவிட கழகம்
2005ம் ஆண்டு தேமுதிக கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2009ல் 10% என வளர்ச்சி கண்ட அந்தக் கட்சி, 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7.9% வாக்குகளுடன் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
தேமுதிகவிற்கு பின்னடைவு
அதன்பிறகு, தேமுதிக, 2016-ல் 2.6%, 2021-ல் 0.4% என வாக்குகளைப் பறிகொடுத்தது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தும் அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை
விருதுநகரில் விஜயபிரபாகரன் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டார். மேலும், தனது சகோதரர் எல்கே சுதீஷை மாநிலங்களவை எம்.பி.யாக்கலாம் என்று பிரேமலதா நினைத்தார். ஆனால், தேமுதிகவுக்கு அதிமுக சீட் வழங்கவில்லை.
திமுக கூட்டணியில் தேமுதிக
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் சேரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திமுக கூட்டணியை உறுதி செய்தார் பிரேமலதா.
தேமுதிகவிற்கு ராஜய்சபா சீட்
இந்நிலையில், ஏற்கனவே பேசியபடி, திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜயசபா சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவாலயம் வந்தநிலையில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
எத்தனை தொகுதிகள், விரைவில் முடிவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது. சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுகவை சேர்ந்த குழுவினரும், தேமுதிகவின் குழுவினரும் கலந்து பேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்யசபா சீட் யாருக்கு? பிரேமலதா அறிவிக்கிறார்
பின்னர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பிரேமலதா, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளரை பின்னர் அறிவிப்பார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது, ஒரு வாரத்துக்கு பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிய வரும்’’ என்றார்.
தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கையில், எல்.கே. சுதீஷ் ராஜ்யசபாவிற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.
===================