

ECLGS 5.0: The Central Government's Financial Assistance Scheme for Indian Enterprises -Who Benefits? Full Details!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளால் உலகப் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ECLGS 5.0 திட்டம்
இந்தச் சூழலில், இந்தியத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ECLGS 5.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ECLGS 5.0 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 2.55 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக ரூ. 5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவாதம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) 100% அரசு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
விமானத் துறை உள்ளிட்ட இதர தொழில்களுக்கு 90% உத்தரவாதம் அளிக்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற எவ்வித உத்தரவாதக் கட்டணமும் (Guarantee Fee) வசூலிக்கப்படாது, இது கடனை எளிதாகவும் மலிவாகவும் மாற்றுகிறது.
கடன் வரம்பு மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை
MSME-கள் மற்றும் இதர வணிகங்கள் தங்களின் செயல்பாட்டு மூலதனத்தில் 20% வரை கடன் பெறலாம் (அதிகபட்ச வரம்பு ரூ. 100 கோடி). விமான நிறுவனங்களுக்கு இந்த வரம்பு ரூ. 1,500 கோடி வரை இருக்கும்.
முக்கியமாக கடனைத் திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை, இது நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவும்.
இத்தட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்?
மார்ச் 31, 2026 நிலவரப்படி வங்கிகளில் Standard Account அதாவது முறையான வரவு-செலவு கொண்ட கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தகுதியுடையவை.
இத்திட்டத்திற்கான கடன் ஒப்புதல் மார்ச் 31, 2027 வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தை National Credit Guarantee Trustee Company Limited (NCGTC) நிர்வகிக்கிறது.
மேற்கு ஆசியப் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சப்ளை செயின் பாதிப்பு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றிலிருந்து சிறு வணிகங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க இத்திட்டம் ஒரு முக்கிய அரணாகப் பார்க்கப்படுகிறது.
=====