

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
அதிமுக தலைமையில் NDA கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வந்து இருப்பது வலுவாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று, மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகித்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
அமித் ஷாவுடன் எடப்பாடி ஆலோசனை
நேற்று முன்தினம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு வர இருக்கும் கட்சிகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று கூறினார். தினகரன் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதை சூசகமாக அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடி - நயினார் சந்திப்பு
இந்தநிலையில், அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள இபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. பாஜக பலமாக இருப்பதாகக் கருதப்படும் தொகுதிகளைப் பட்டியலிட்டு அந்த தொகுதிகளை நயினார் நாகேந்திரன் கேட்டதாக தெரிகிறது. கூட்டணிக்கு இன்னும் வரக்கூடிய கட்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
எடப்பாடி - நயினார் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ” இந்த மாத இறுதியில் ( ஜனவரி 28 ) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக இருக்கிறது. பிரதமரின் வருகை தொடர்பாக பழனிசாமியுடன் ஆலோசிக்கப்பட்டது. இன்றைய ஆலோசனை சுமூகமாக நிறைவு பெற்ற நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக, பாஜக போட்டியிடும் இடங்கள் தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பாஜகவுக்கு 56 தொகுதிகள்?
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
ஆனால் கடந்த தேர்தல்களில் பாஜக இரண்டாம் இடம் அல்லது 3வது இடம் பிடித்த தொகுதிகளைப் பட்டியலிட்டு அந்த தொகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களை ( 56 தொகுதிகள் ) தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக நிர்பந்திப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, எத்தனை தொகுதிகள், எங்கு எங்கு எல்லாம் போட்டி போன்ற விஷயங்கள் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
====================