
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் :
பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக, பகிரங்கமாக குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
குற்றச்சாட்டும், மறுப்பும் :
அவரின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது. வாக்கு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
வாக்கு திருட்டு - இழிவுபடுத்தக் கூடாது :
வாக்கு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை யாரும் இழிவுபடுத்தக் கூடாது. தவறான கதையை புனைவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது தேர்தல் ஆணையத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களின் நேர்மை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
ஆதாரம் இருந்தால் அளிக்கலாம் :
தேர்தலில் ஒருவர் 2 முறை வாக்கு செலுத்தியதற்கான ஆதாரம் இருந்தால், பிரமாண பத்திரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். 1951-52ம் ஆண்டு முதல், இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு நபர் ஒரு வாக்கு நடைமுறை அமலில் உள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே, மோசமான சொற்களை பயன்படுத்தி விமர்சிப்பதை தவிர்த்து, ஆதாரங்களை அளித்தால், நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======