
Rahul Gandhi on Voter ID Fraud Issue : இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைய செயல்பாட்டின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் மீது புகார் :
தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோற்று, ஆளுங்கட்சி வெற்றி பெறும் போது, முறைகேடாக தேர்தல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
ராகுல்காந்தி குற்றச்சாட்டு :
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன,கர்நாடகாவில் 40,000 போலி வாக்காளர் முகவரிகள் உள்ளன என்று குற்றம்சாட்டினார். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு யோசனை :
தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் மோசடிகளை கண்டுபிடித்து விட முடியும். தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என்ற எனது நீண்ட கால சந்தேகத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின” என்று ராகுல் குறைகூறி இருந்தார்.
ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் :
இதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எதிர்வினை ஆற்றி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி, ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். ” தகுதியற்ற வாக்காளர்களை சேர்ப்பது, தகுதியான வாக்காளர்களை நீக்குவது பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 1960ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, பிரமாண பத்திரத்தில் வாக்காளர் பெயர்களுடன் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க : ராகுலை போல பொய் பேசாதீங்க : எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நேரில் சந்திக்க ராகுலுக்கு அழைப்பு :
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 8ம் தேதி தன்னை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி சந்திக்கவில்லை என்றால் வாக்காளர் பதிவு விதிகள் 2020ன் படி, தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-----