
ட்ரம்ப் கருத்து, அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள் :
Minister S Jaishankar About Operation Sindoor : இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தன்னால் தான் நிறைவேறியதாக, அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். இதற்கு உரிய விளக்கத்தை இந்தியா கொடுத்து பிறகும், இந்த விமர்சனத்தை அவர் கைவிடவில்லை. எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அரசியலாக்கி வருகின்றன.
நேருவால் சிந்து நதி ஒப்பந்தம் :
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குக் காரணம், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட திருப்திப்படுத்தும் அரசியல். இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளம் என்று அவர் கூறினாலும், நமக்கு கிடைத்தது பயங்கரவாதமும் வெறுப்புமே. பாகிஸ்தானின் பஞ்சாப் விவசாயிகள் மீது நேருவுக்கு இருந்த அக்கறை, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள் மீது இல்லை.
பயங்கரவாதத்தை மென்மையாக கையாண்ட காங்கிரஸ் :
கடந்த காலங்களில் நமது நாட்டில் பெரிய பயங்கரவாத சம்பவங்கள் நடந்தபோது, நமது நாடு எவ்வாறு பதிலளித்தது என்பதை உலகம் பார்த்தது. பயங்கரவாதத்தை நாம் கண்டிப்போம், பின்னர் 3 மாதங்களில் பேச்சுவார்த்தையை தொடங்குவோம். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதே காங்கிரசின் வேலையாக போய்விட்டது.
இந்தியா மீதான உலகின் பார்வையில் மாற்றம் :
உலக மன்றங்களில் பயங்கரவாதத்தை பாஜக அரசு விவாதத்திற்கு கொண்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் காரணம் என்பதை ஐநாவில் பதிவு செய்திருக்கிறோம். இந்தியா குறித்த உலகின் பார்வை இப்போது மாறிவிட்டது. இந்தியா இனி பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்து இருக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது தெளிவுபடுத்தினோர். பாகிஸ்தானுடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மாட்டோம்.
உலகத் தலைவர்கள் தலையீடு இல்லை :
உலகின் எந்தத் தலைவரும் இந்தியா தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லவில்லை. இது தொடர்பாக நடந்த உரையாடல்கள் எதிலும் வர்த்தகம் குறித்து பேசப்படவில்லை. ஏப்ரல் 12 முதல் ஜூன் 12 வரை பிரதமருக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை”. இவ்வாறு ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
=====