

Father Carries Son on Shoulder to Cross Masan River Bihar Flood Viral Video
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் பகா (Baha) பகுதியில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு வீடியோ, அங்குள்ள வெள்ள பாதிப்புகளின் கொரமான நிலவரத்தையும், மக்களின் அன்றாட அவல நிலையையும் மீண்டும் மிகக் கொடூரமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பதறவைக்கும் தந்தை - மகன் வீடியோ
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆக்ரோஷமாகப் பாயும் மசான் ஆற்றின் மறுபுறம் தான் அந்த சிறுவனின் பள்ளி அமைந்துள்ளது. வெள்ளம் வந்தாலும் பரவாயில்லை, மகனுடைய படிப்பு எக்காரணம் கொண்டும் பாழாகிவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்தோடு, அந்த தந்தை தன் மகனைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி நடக்கிறார்.
நெஞ்சுவரை பாயும் வெள்ளம்
நெஞ்சு வரை பாயும் ஆபத்தான வெள்ளத்தில் அவர்கள் மெதுவாக நகர, ஆற்றங் கரையிலிருந்து அந்தச் சிறுவனின் தாய் பதற்றத்துடன் ஏதோ பேசுகிறார். தந்தையும் மகனும் அவரிடம் பேசியபடியே, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மரணப் பிடியில் இருக்கும் ஆற்று வெள்ளத்தைக் கடக்கும் காட்சி பார்ப்போரை அப்படியே உறைந்துபோகச் செய்துள்ளது.
நேபாள மழையும், தொடரும் அணை நீர் திறப்பும்
நேபாள நாட்டின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கடுமையான கனமழை காரணமாக, பீகாரின் எல்லை மாவட்டங்கள் எப்போதுமில்லாத அளவிலான கடுமையான வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
தொடர் மழையால் கண்டகி, மசான் உள்ளிட்ட பல்வேறு மலைக் காட்டு ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளநீர்
ஏற்கனவே கடந்த ஜூலை 14-ஆம் தேதி கண்டகி அணையில் இருந்து சுமார் 2.21 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது வால்மீகிநகர் அணையிலிருந்து மீண்டும் 1.34 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மிக வேகமாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்
வெள்ளப்பெருக்கு காரணமாக பகா கோட்டத்திற்கு உட்பட்ட பிப்ராசி மற்றும் மதுபனி ஒன்றியங்களைச் சேர்ந்த சிசாய், சியுரஹி உள்ளிட்ட தாழ்வான பஞ்சாயத்துகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் உடமைகளைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
வளர்ச்சி எங்கே? பீகாரின் கிராமப்புற அவல நிலை
உள்ளூர் மக்களின் கருத்துப்படி, ராம் ஒன்றியத்தில் உள்ள தோன் (Don) பகுதியைச் சேர்ந்த டஜன் கணக்கான கிராமங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சுமார் 22 ஆறுகளால் சூழப்பட்டுத் தனித்தீவாக மாறிவிடுகின்றன.
இந்த வீடியோ ஒருபுறம் கல்வியின் மீதான எளிய மக்களின் விழிப்புணர்வையும், ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தையும் காட்டினாலும். மறுபுறம் முறையான சாலை, பாலம், மருத்துவம் மற்றும் மின்சாரம் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத பீகாரின் கிராமப்புற அவல நிலைமையை உலகிற்கு அப்படியே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
=====