அந்தமான் பகுதியில் இயற்கை எரிவாயு : எரிசக்தி முயற்சியில் மைல்கல்
இயற்கை எரிவாயு :
Discovery Of Natural Gas In Andaman Sea : மாற்று எரிபொருளை நோக்கி உலகம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், அதில் இயற்கை எரிவாயு முக்கிய அங்கம் வகித்து வருகிறது. வீடுகளுக்கு சிலிண்டர் எரிபொருள் தொடங்கி, தொழிற்சாலைகளை இயக்குவது, வாகனங்களில் சிஎன்ஜி என எரிபொருளின் தேவை எப்போதும் இருக்கிறது.
இந்தியாவின் எரிபொருள் தேவை :
140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டில், லட்சக் கணக்கான வாகனங்கள் இயக்கபட்டு வருகின்றன. கோடிக்கணக்கான வீடுகளுக்கு எரிவாயு எரிபொருள் வழங்கப்படுகிறது.
அந்தமானில் இயற்கை எரிவாயு :
இந்தச் சூழலில், அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல் முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 9.20 கடல் மைல் (17 கி.மீ) தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் 2 என்ற இடத்தில் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது 295 மீட்டர் நீர் ஆழத்திலும், 2,650 மீட்டர் இலக்கு ஆழத்திலும் அமைந்துள்ளது. அந்தமான் கடற்கரை தொகுதியான AN-OSHP-2018/1-ல் ஆய்வு கிணறு தோண்டப்பட்டபோது இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் முதன்முறை :
அந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் வளம் இருப்பதையும், குறிப்பாக அங்கு இயற்கையான வாயு ஐஸ் கட்டிகள் (hydrates) வடிவில் எரிவாயு இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இந்தியப் பெருங்கடலில் இதுபோன்று எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.
எரிவாயு எப்படி உருவாகிறது? :
இயற்கை எரிவாயு என்பது, கரிமப் பொருட்களின் அடுக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நிலத்தடியில் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் போது உருவாகிறது. இது முதன்மையாக மீத்தேன் (methane) வாயுவால் ஆனது, இது எரிபொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எதிர்கால ஆய்வுகளுக்கு இது உதவும் என்று ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி பாதுகாப்பில் புதிய மைல்கல் :
இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எக்ஸ் பதிவில் கூறியதாவது, “அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் (National Deep Water Exploration Mission) கீழ், இந்தியாவின் ஹைடிரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு கண்டுபிடிப்பு, இந்தியாவின் எரிசக்தி துறையில் தன்னிறைவுக்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடல் படுகையில் இருந்து இயற்கை எரிவாயு கிடைத்தால், இந்தியாவின் இயற்கை எரிவாயு பெரிய அளவில் பூர்த்தியாகும். இதற்காக வெளிநாடுகளை நம்பி இருக்கவும் தேவையில்லை.
====