

நியூசிலாந்தில் பிரதமர் மோடி
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டு தனது பயணத்தின் நிறைவாக நியூசிலாந்து வந்துள்ளார்.
ராஜீவ் காந்திக்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எழுச்சிமிகு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி ஆக்லாந்தை சென்றடைந்தபோது, அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் வந்து அன்போடு கட்டித் தழுவி வரவேற்றார்.
'மௌரி' பழங்குடியின மக்களின் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது
பிரதமர் மோடி - பிரதமர் லக்சன் பேச்சு
தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரூ. 35,000 கோடி வர்த்தக இலக்கு
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆண்டு இரு தரப்பு வர்த்தகத்தை (பொருட்கள் மற்றும் சேவைகள்) வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 7 பில்லியன் நியூசிலாந்து டாலராக (சுமார் ரூ.35,000 கோடி) இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன் தரக் கூடிய 'இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து, அதனை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
20 பில்லியன் டாலர் முதலீடு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக் கொண்டது.
இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடியாகும். இந்த முதலீட்டு உறுதி அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம்
இந்திய கடற்படை மற்றும் நியூசிலாந்து ராணுவத்திற்கு இடையே பரஸ்பர தளவாட பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பிரத்யேகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
நேரடி விமான சேவை
இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா துறையை மேம்படுத்த புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பழங்களுக்கான சிறப்பு மையம்
கிவிப்பழம், ஆப்பிள் மற்றும் தேன் உற்பத்தியில் விவசாயத் திறனை மேம்படுத்தவும், இதற்கான சிறப்பு மையங்களை உருவாக்கவும் இரு நாடுகளும் முன் வந்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதிலும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் நியூசிலாந்து காவல்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.
பிரதமர் மோடி மகிழ்ச்சி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் மூலம் இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்பு மற்றும் பொருளாதார உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
=======================