

இந்திய விடுதலை போர்
1857ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் முதல் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற அகிம்சைப் போராட்டங்கள் வரை, இந்தியர்களின் தொடர் எதிர்ப்பால் பிரிட்டிஷ் அரசால் இனி இந்தியாவைத் தொடர்ந்து ஆள முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
நிதி நெருக்கடியில் பிரிட்டன்
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் விளைவாகப் பிரிட்டன் கடும் பொருளாதார மற்றும் இராணுவச் சரிவைச் சந்தித்ததால், உலகெங்கிலும் உள்ள தனது காலனி ஆதிக்க நாடுகளைக் கட்டுப்படுத்துவது பெரிய தலைவலியாகவே இருந்தது.
சுதந்திரத்தை அறிவித்த கிளமெண்ட் அட்லி
இந்தச் சூழலில், 1945ல் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த கிளமெண்ட் அட்லி தலைமையிலான தொழிலாளர் கட்சி, இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
மவுண்ட்பேட்டனிடம் அதிகாரம்
இதற்காக, 1947 மார்ச் மாதம் வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதிகாரத்தை மாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்திய தலைவர்களுடன் ஆலோசனை
இந்தியா வந்த மவுண்ட்பேட்டன், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், முகமது அலி ஜின்னா, லியாகத் அலி கான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை ஏற்கப்பட, 'மவுண்ட்பேட்டன் திட்டம்' உருவாக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை
பிரிட்டிஷ் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற 1947 மே மாதம் லண்டன் சென்ற மவுண்ட்பேட்டன், ஜூன் மாதம் இந்தியா திரும்பினார். தொடர்ந்து 1947 ஜூன் 3-ஆம் தேதி, அகில இந்திய வானொலி வழியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிக்கப்படும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களை மவுண்ட்பேட்டன் சந்திப்ப போது, வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நிகழ்ந்தது.
ஆகஸ்டு 15, சுதந்திர நாள் - அறிவிப்பு
"சுதந்திரத்திற்கான அதிகாரம் கைமாறும் தேதி ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, ஒரு நொடி கூட தாமதம் செய்யாலம், "ஆகஸ்ட் 15" என்று மவுண்ட்பேட்டன் பதிலளித்தார்.
இது குறித்து பின்னர் பேசிய மவுண்ட் பேட்டன், "உண்மையில் அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேதி அல்ல. செய்தியாளர் கேட்ட அந்த நொடியில், என் இராணுவ வாழ்க்கையின் மிக முக்கிய மைல்கல்லான ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15 என் நினைவுக்கு வந்தது. அதனால் உடனே அந்தத் தேதியை அறிவித்தேன்" என்று குறிப்பிட்டார். இதுவே இந்தியாவின் சுதந்திர நாளாக மாறி இன்று 80 ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 15ன் முக்கியத்துவம்
இரண்டாம் உலகப் போரின் போது ஆசியப் பகுதிகளில் ஜப்பான் தீவிரமாக முன்னேறி, சிங்கப்பூர், மலேசியா, பர்மா (மியான்மர்) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் வடகிழக்கு எல்லை வரையிலும் ஊடுருவியது.
ஜப்பானை ஒடுக்கிய மவுண்ட்பேட்டன்
1943-ல் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கான கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக மவுண்ட்பேட்டன் நியமிக்கப்பட்டார். பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட கூட்டுப் படைகளை ஒருங்கிணைத்து ஜப்பானின் ஆதிக்கத்தைத் தடுக்கும் பெரும் பொறுப்பை அவர் ஏற்றார்.
மவுண்ட்பேட்டனின் தலைமையில் இந்திய-பிரிட்டிஷ் படைகள் இம்பால் மற்றும் கோஹிமா போர்களில் ஜப்பானைக் கடுமையாகத் தோற்கடித்தன. இது உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட முதல் பெரிய பின்னடைவாகும்.
தொடர்ந்து அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளை ஜப்பானியக் கட்டுப்பாட்டிலிருந்து மவுண்ட்பேட்டனின் படைகள் மீட்டன.
1945ல் சரண் அடைந்த ஜப்பான்
இறுதியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945 ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானியச் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ (Hirohito) முறைப்படி சரணடைவதாக அறிவித்தார். இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
உலகமே கொண்டாடிய மவுண்ட்பேட்டன்
ஜப்பானின் வீழ்ச்சிக்குக் காரணமான தளபதியாக உலகம் முழுவதும் மவுண்ட்பேட்டன் கொண்டாடப்பட்டார். இதன் காரணமாகவே தனது இராணுவ வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைக் குறித்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியை இந்திய சுதந்திர தினமாக மவுண்ட்பேட்டன் தேர்வு செய்தார்.
சுதந்திர தினம் - வரலாற்று பின்னணி
ஒரு நிருபரின் கேள்வி, மனதில் நின்ற ஆகஸ்டு 15, நொடியில் முடிவு எடுத்த மவுண்ட்பேட்டன் என இந்திய சுதந்திர தின நாள் இந்தியர்களால் அல்லாமல், பிரிட்டனை சேர்ந்த ஒருவரால் தீர்மானிக்கப்பட்டது என்பதே வரலாற்று நிகழ்வு.
இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கும் ஆகஸ்டு 14 சுதந்திர நாளாக வர மவுண்ட்பேட்டனின் அறிவிப்பே காரணமாக அமைந்து விட்டது.
==============