
ஆபரேஷன் சிந்தூர் - மக்களவையில் விவாதம் :
Amit Shah Speech in Parliament : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் நடைபெறும் விவாதத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். அவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலளித்தார்.
இந்தியாவுக்கு 100 சதவீதம் வெற்றி :
”ஆபரேஷன் சிந்தூரில் நமக்கு 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் கோருவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் தான் போரை நிறுத்த இந்தியா முடிவு செய்தது.
பாகிஸ்தானை பாதுகாக்கும் காங்கிரஸ் :
பயங்கரவாதிகளுக்கான ஆதாரத்தை ப.சிதம்பரம் கேட்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானை பாதுகாக்கின்றனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு(Pahalgam Attack) மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா கொல்லப்பட்டான். பஹல்காம் பயங்கரவாதிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதை அவர்கள் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சி இல்லையா? :
ஆபரேஷன் சிந்தூர் போலவே, ஆபரேஷன் மகாதேவும் முழு வெற்றி அடைந்தது. ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 3பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவில் தாக்குதல் நடத்தி உள்ளோம்.
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்குரியது :
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கி விட்டார். 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ.பயணித்து அவர்கள் நிலத்திலேயே பயங்கரவாதிகளை அழித்தோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது தான். மன்மோகன் சிங் அரசை போல நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் - நேருவே காரணம் :
பாகிஸ்தானில் அனைத்து பயங்கரவாதிகள் முகாம்களையும் அழித்துவிட்டோம். பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில், போரை நிறுத்த இந்தியா தான் முடிவு செய்தது. ஆனால், முன்பு நேருவின் போர் நிறுத்தத்தால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்று இருந்தால் பிரச்சினை வந்திருக்காது” இவ்வாறு உரையாற்றிய அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
====