
வரி குறைப்பு அமல் :
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்து இருக்கின்றன. இவற்றின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்க தொடங்கி இருக்கிறது.
பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது :
பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் பனீர், பீஸா, பிரட் ஆகியவற்றுக்கும் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி, டிவி, பாத்திரம் கழுவும் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு இருப்பதால், அவற்றின் விலைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.
மக்களின் வருமானம் அதிகரிக்கும் :
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி தரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கல்விப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் ஏற்பட்டுள்ள முக்கியமான குறைப்பு, நடுத்தர மக்களின் வருமானத்தை அதிகரிக்கும். மேலும், இன்னும் அதிகமாக சேமிக்க அவர்களை ஊக்குவிக்கும். வரி சீர்திருத்தம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியை நிறைக்கும்.
மோடியின் உறுதிக்கு ஜிஎஸ்டி சான்று :
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒரு சான்றாகும். புதிய சீர்திருத்தம், பல்வேறு வகையான பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்ததுடன், மக்களின் செலவினங்களை மேலும் குறைக்கும். மேலும் உலகின் மிகவும் வளமான நாடாக மாறும் பாதையில் இந்தியா இன்னும் வேகமாக முன்னேறிச் செல்லும். ஏழைகள், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மோடியின் உறுதிக்கு அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் உதவியாக இருக்கும்” இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
================