
பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை :
India Tests Powerful 1200 HP Hydrogen Train in ICF Chennai : உலகின் 4வது பெரிய ரயில்வே போக்குவரத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது. தினமும் ஆயிரக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு, பல கோடி பேர் அவற்றில் பயணம் செய்கின்றனர். பொது மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தேவைப்படும் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள்
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப். ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது.
ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் :
இவை நிறைவடைந்த நிலையில், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் (Hydrogen train service) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும். ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது :
ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்களுக்கு பெட்ரோல், டீசல் ஏன் மின்சாரம் கூடத் தேவைப்படாது. நீராவியால் மட்டுமே இவை இயங்குவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். அதேசமயம் வேகத்தில் எந்த சமரசமும் இருக்காது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் இந்த ரயில்கள் சீறிப்பாயக் கூடியவை. இந்த ரயிலில் கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும். 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ஹைட்ரஜன் ரயில்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயில் - 5வது நாடாக இந்தியா :
உலகளவில் ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் சீனாவில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் பயன்படுத்தும் 5வது நாடாக இந்தியா சேருகிறது.
===