

டெல்லி கார் குண்டு வெடிப்பு
Faridabad Terror Module Mastermind Radicalised Medical Students : டெல்லியில் கார் குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் அரங்கேற்றினார்கள். இதில் 13 பேர் உயிரிழக்க, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் பின்னணியில் செயல்பட்ட அனைவரும் மருத்துவர்கள் என்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிரவாதிகளாக மாறிய டாக்டர்கள்
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மருத்துவர்கள், தீவிரவாதிகளாக மாறியது எப்படி? வெடிப்பொருட்களை கையாண்டது எப்படி? என விசாரணையை போலீசார் முடுக்கி விட்ட போது தான், இதன் பின்னணியில் காஷ்மீரை சேர்ந்த சதிகாரன் ஒருவன் செயல்பட்டது அம்பலமானது.
சதிகாரன் இமாம் இர்பான் அகமது
சோபியான் மாவட்டத்தில் கைதான இமாம் இர்பான் அகமதுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இமாம் ஆக மாறுவதற்கு முன்பு, ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் துணை மருத்துவ ஊழியராக இர்பான் அகமது பணியாற்றி இருக்கிறார்.
டாக்டர்கள் முளைச்சலவை
அப்போது தன்னிடம் நெருக்கமாக பழகிய டாக்டர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத பாதைக்கு அவர்களை திசை திருப்பி உள்ளார். அதன் பின் நவ்காம் மசூதியில் இமாமாக பணியாற்றிய இர்பான் அகமது, தொழுகைக்கு வரும் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுடன் நெருங்கி அவர்களையும் பயங்கரவாத பாதையில் அழைத்து சென்று இருக்கிறார்.
அவர் விதைத்த தீவிரவாத எண்ணங்கள் காரணமாகவே, ஃபரிதாபாதை மையமாக கொண்டு டாக்டர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை உருவாக்கினர்.
டாக்டர்களுடன் இர்பான் முகமது
அந்த வகையில் இதுவரை கைது செய்யப்பட்ட 7 டாக்டர்களும், டெல்லியில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய உமர் முகமதுவும், இர்பான் முகமது விரித்த வலையில் விழுந்தனர். அதிலும் டாக்டர் உமர், இர்பானுடன் நெருக்கமாக பழகியவர் எனத் தெரிய வந்துள்ளது.
ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு
ஜெய்ஷ் - இ - முகமது பெண் பயங்கரவாத பிரிவான ஜமாத் - உல் - மொமினாத்துக்கு இர்பான் தான் தலைவர் என்றும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளிடமும் அகமது தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவ மாணவர்கள் மனதில் பயங்கரவாத சிந்தனையை வளர்ப்பது தான் இவரது முழு நேர பணியாகவே இருந்துள்ளது.
மிகப்பெரிய சதித்திட்டம்
இர்பான் முகமது கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது நெட்வொர்க் உடைக்கப்பட்டு, அவரோடு தொடர்பில் இருந்த மருத்துவ மாணவர்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இர்பான் கைது மிகப்பெரிய சதி செயல்கள் அரங்கேறாமல் தடுக்க உதவி உள்ளது.
====