
பீகார் சட்டமன்ற தேர்தல்
India Alliance CM Candidate Tejashwi Yadav for Bihar Election 2025 : பீகார் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தினங்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி- இண்டியா கூட்டணி
பீகார் சட்டசபை தேர்தலை ஒட்டி, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு சமீபத்தில் சுமுகமாக முடிந்தது. ஆனால், இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படமால் இருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பயங்கர மோதல் வெடித்து, பெரும் பரபரபை கிளப்பியது. இண்டியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கூட்டணி குழப்பத்தால் பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.
இண்டியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது குழப்பங்கள் நீங்கி, தேஜஸ்வி யாதவ்வை முதலமைச்சர் வேட்பாளராக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் - ஆர்ஜேடி தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் வேட்பாளராக வி.ஐ.பி கட்சியின் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் பின்னணி
லாலு பிரசாத் யாதவ்வின் இளைய மகனான 35 வயதான தேஜஸ்வி யாதவ், எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார். முன்னதாக, நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்திய போது, பீகாரின் துணை முதலமைச்சராகவும் இருந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு முதன் முறையாக எம்எல்ஏ ஆன தேஜஸ்வி. மீண்டும், 2020-ம் ஆண்டு 2-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். டில்லி டேர்டெவில்ஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார்.லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்குகளில் தேஜஸ்வியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
மேலும் படிக்க : Bihar Elections : வலுவான நிலையில் NDA, தடுமாறும் இந்தியா கூட்டணி!
தேர்தலில் பிரியும் வாக்குகள்
பீகாரில், ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ்-ன் இண்டியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருபெரும் கட்சிகள் மோதவிருந்த நிலையில், தற்போது புதிதாக பிரஷாந்த கிஷோர் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளது வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு வித்தியாசத்தில் பெரும் மாற்றத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.