

பிகார் சட்டமன்ற தேர்தல் 2025 :
NDA vs INDIA Alliance in Bihar Assembly Election 2025 : பிகார் சட்டசபையில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், அங்கு நவம்பர் 6ம் தேதி 121 தொகுதிகளிலும் நவம்பர் 11ம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது(Bihar Election 2025 Dates). நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் களத்தில் பிரசாந்த் கிஷோர்
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி பிகாரில் நடக்கிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி செயல்பட்டு வருகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுவாரஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
நம்பிக்கையுடன் மோதும் தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை, பாஜக - ஜக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சியிருக்கும் 41 தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகள் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டு, தேர்தலை எதிர்கொள்கிறது NDA கூட்டணி. முதல்வர் நிதிஷ்குமாரின் தீவிர பிரசாரமும், பிரதமர் மோடியின் ரோடு ஷோ, சூறாவளி சுற்றுப் பயணம் வெற்றிக் கனியை பறித்து தரும் என்ற நம்பிக்கை அந்தக் கூட்டணியில் நிலவுகிறது.
இந்தியா கூட்டணியில் பெரும் குழுப்பம்
அதேசமயம் எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி மகா பந்தன் என்ற கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. வேறுசில சிறிய கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற்று இருக்கின்றன. தொகுதி பங்கீடு விவகாரத்தில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. 121 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ், ஆர்ஜேடி உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, முதல்வர் வேட்பாளர் என பிரச்சினைகள் வரிகட்டி நிற்பதால், லாலு பிரசாதும், ராகுலும் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பெண் வாக்காளர்கள் கையில் - வெற்றி
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பிகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி தான் என்று அடித்துக் கூறும் நிலையில், இந்தியா கூட்டணியின் குழப்பம் வெற்றியை எளிதாக்கி விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிகாரில் பெண் வாக்காளர்கள் அதிகம். அவர்கள் தரும் ஆதரவே பொருத்தே, வெற்றியானது தீர்மானிக்கப்படும். நிதிஷ்குமார் அரசு செயல்படுத்தி உள்ள பெண்களுக்கான நலத்திட்டங்கள், மீண்டும் என்டிஏவை அரியணை ஏற்றும் என்கின்றனர் பாஜக, ஐக்கிய ஜனதா தள தலைவர்கள்.
நிதிஷ்குமாருக்கு சாதகம்
பிகார் முதல்வர் 20 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார் நிதிஷ்குமார் . இதன் காரணமாக ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அதை அறுவடை செய்யும் நிலையில் இந்தியா கூட்டணி இல்லை என்பதே உண்மை. காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்களுக்கும் இடையேயான மோதல், நிதிஷ்குமாருக்கு சாதகமாகவே அமைந்து இருக்கிறது.
இந்தியா கூட்டணிக்கு பி.கே. தலைவலி
போதாக்குறைக்கு, ஜன் சுவராஜ் கட்சியை தொடங்கிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனித்து போட்டியிடுகிறார். இவர் 8 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பிரிப்பார் எனத் தெரிகிறது. பெரிய அளவில் வெற்றி கிடைக்கா விட்டாலும், இவர் பிரிக்கும் அதிருப்தி வாக்குகள், இந்தியா கூட்டணியை பதம் பார்க்கும்.
சாதி வாக்குகள் ஆதிக்கம்
பிகாரில் சாதி வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. உயர் சாதியினர் பெரும்பாலும் பாஜக பக்கமும், யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மகா தலித்துகள், ஒடுக்கப்பட்ட சாதி முஸ்லிம்கள் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்கின்றனர்.
இந்தியா கூட்டணியை பொருத்தவரை ஆர்ஜேடியின் யாதவர் வாக்குகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரசுக்கு இருந்தாலும், நிறுத்தும் வேட்பாளரை பொருத்து, இது மாறுபடும்.
போக்கு காட்டும் ஓவைசி
பீ்கார் தேர்தலில் மற்றுமோரு திருப்பு முனை என்னவென்றால், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி கூட்டணி அமைத்து இருப்பது தான். ஆசாத் சமாஜ் கட்சி, சுவாமி பிரசாத் மெளரியாவின் அப்னி ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரசின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கிறார் ஓவைசி.
தடுமாறும் லாலு கட்சி
ஆர்ஜேடி 20 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லா விட்டாலும், இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விடும். காங்கிரசை பொறுத்தவரை பிகாரில் தனித்து ஆட்சி என்ற இப்போதைக்கு கனவுதான். நிலைமை இப்படி இருக்கும் போது, கூட்டணிக்குள் விட்டுக் கொடுத்த போக ராகுலும், தேஜஸ்வியும் முன் வராவிட்டால், தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : Bihar Election 2025 : முடிவுக்கு வராத உடன்பாடு: திணறும் இந்தியா கூட்டணி
அரியணையில் NDA முதல்வர்?
இந்தியா கூட்டணியில் நிலவும் அதிருப்தி, பிரசாந்த் கிஷோர், ஓவைசி பிரிக்க போகும் வாக்குகள், தேசிய ஜனநாயக கூட்டணியை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே, நவம்பர் 14ம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ்குமார் முதல்வரா? அல்லது வேறு ஒருவரா என்பதை முடிவு செய்யப் போவது NDA தான் என்பது இப்போதைய நிலையாக இருக்கிறது.
===========================