

இந்தியாவின் நிலைப்பாடு டிரம்ப் கடுப்பு
US Tariff on India, China : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கண்களை உறுத்தி வருகிறது. இதை காரணம் காட்டி ஏற்கனவே இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்திய பொருட்களுக்கு 500% வரி
இந்தநிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீத வரியை விதிக்கும் மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்து இருக்கிறார். குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் இந்த மசோதாவை ஆதரிப்பதால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவுக்கு செக் வைக்கும் இந்தியா
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, அமெரிக்காவுக்கு செக் வைக்கும் வகையில் சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையில் தளர்வுகளை கொண்டு வர இந்தியா முடிவு செய்திருக்கிறது.
இந்திய - சீன உறவில் பாதிப்பு
2020ம் ஆண்டு இந்திய-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவுடன் நிலப்பரப்பை பகிர்ந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்திய அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க வேண்டுமானால் கூடுதல் பதிவுகள் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற கடுமையான விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்மூலம் மறைமுகமாக சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைவது தடுக்கப்பட்டது. அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க இருப்பதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா மீதான தடைகளை தளர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு வர்த்தக உறவில் அதிரடி மாற்றங்கள் வரப்போகிறது.
சீன நிறுவனங்களுக்கு தாராளம்
சுமார் 700 பில்லியன் டாலர் முதல் 750 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் இருந்த தடை விரைவில் நீக்கப்படும். மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் சீன நிறுவனங்கள் இனி நுழையும். இதனால் இந்தியச் சந்தையில் போட்டி அதிகரிக்கும் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்த தளர்வுகள்
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் மற்றும் தொழில்முறை விசா நடைமுறைகள் சீராகி விட்டன. அடுத்து வர்த்தகத் தளர்வு பெரிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.
தளர்வுகளிலும் கட்டுப்பாடுகள் இருக்கும்
அதேசமயம் அனைத்து தடைகளையும் ஒரேயடியாக நீக்க கூடாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் (FDI) மீதான கட்டுப்பாடுகள் தொடரும்.
'புதிய சீனக் கொள்கை'
அமெரிக்காவை சமாளிக்கும் வகையில், இந்தியாவின் 'புதிய சீனக் கொள்கை' அமையவிருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கான இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
===============