
இந்தியா மீது அமெரிக்கா காட்டம்
India Reply To Donald Trump on Russia Crude Oil Import : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, அதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய பொருட்கள் 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னெடுப்பு தான்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பாக அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இருந்தார். டிரம்ப் தனது நல்ல நண்பர் என்றும் அவர் பாராட்டி இருந்தார்.
கச்சா எண்ணெய் கொள்முதல் - டிரம்ப்
இருவரிடையே நடைபெற்ற பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ” ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார்.
ரஷ்யாவை தனிமைப்படுத்துவோம்
உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என்னை நேசிக்கிறார். நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார், என்று பேட்டியளித்தார்.
டிரம்ப் பேச்சு - இந்தியாவின் நிலைப்பாடு
இது சர்ச்சையான நிலையில், வெளியுறவு அமைச்சகம் மோடி-டிரம்ப் பேச்சு குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், "எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமை. அந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்
நிலையான எண்ணெய் விலை, பாதுகாப்பான விநியோகம் ஆகியவையே இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்கு. இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதும் இதில் அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் : கையெழுத்திட்ட டிரம்ப் பெருமிதம்
அதிபர் டிரம்பிற்கு பதிலடி
இதன்மூலம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால், அதிபர் டிரம்ப் கூறியது பொய் என்பதும் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.
========