
காஷ்மீரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ :
Operation Mahadev on Pahalgam Attack : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு இருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.
பயங்கரவாதிகள் நடமாட்டம், தேடுதல் வேட்டை :
ஸ்ரீநகர் பகுதியில் ஹர்வான் அருகே தாச்சிகம் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆபரேஷன் மகாதேவ்(Operation Mahadev) வேட்டையின் ஒரு பகுதியாக ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் சுட்டுக்கொலை :
பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் தொடுக்க, இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. 3 பேரை கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக் கொலை :
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை படுகொலை செய்த பயங்கரவாதிகள் என்பது தெரிய வந்திருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களுக்கு, சுலைமான் என்ற பயங்கரவாதி தலைமை வகித்ததும் தெரிய வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் :
பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்ற நான்கு பயங்கரவாதிகள் திடீரென கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் ஒரு பெண் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேற்றம், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்து வந்த பாகிஸ்தானியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைப்பு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.
100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை :
பஹல்காம் தாக்குதலுக்கு உரிய வகையில் பதிலடி கொடுப்பதற்காக இந்திய ராணுவம் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பாகிஸ்தான் பகுதியில் முகாமிட்டிருந்த சுமார் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
=====