

இந்திய ரயில்வே
Indian Railway Fare Increase Hike 2025 Effective Date Update in Tamil : இந்தியாவில் பொது போக்குவரத்திற்காக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். நாள்தோறும் லட்சக் கணக்கானோர் ரயில்களில் சென்று வருகின்றனர். ரயில் கட்டணம் கடந்த ஜூலை மாதம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டது.
ரயில் கட்டணம் உயர்கிறது
நடைமுறைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, நீண்டதூரப் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு 26ம் தேதி செயல்பாட்டிற்கு வருகிறது.
கி.மீ. 1 பைசா - 2 பைசா
அதன்படி சாதாரண ரயில்களில் 215 கி.மீ. தூரத்துக்கு மேற்பட்ட பயணத்துக்கான கட்டணம் கி.மீ.க்கு 1 பைசா உயர்த்தப்படும். மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கான கட்டணம் கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வு டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது
அதேநேரம், புறநகர் ரயில் கட்டணம் மற்றும் மாதாந்திர சீசன் கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் இல்லை. அதேபோல, சாதாரண ரயில்களில் 215 கிமீ தூரம் வரை பயணிப்பவர்களுக்கும் கட்டண உயர்வு கிடையாது
குறைந்த அளவே உயர்த்தப்படுகிறது
"ரயில் கட்டண உயர்வு பயணிகளுக்கு சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக ஏ.சி. பெட்டியில் 500 கி.மீ. தூரம் பயணம் செய்வோருக்கான கட்டணம் ரூ.10 மட்டுமே அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகள் கணிசமாக விரிவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களில் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிப்பதற்கான கட்டணம் 15 ரூபாய் அதிகரிக்கும்
ரயில்வேக்கு ரூ.600 கோடி கூடுதல் வருவாய்
கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். பயணிகள் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பணியாளர்கள் எண்ணிக்கையை ரயில்வே அதிகரித்துள்ளது. இதனால், சம்பளச் செலவு ரூ.1.15 லட்சம் கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ.60,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ரயில்வேயின் மொத்த செயல்பாட்டுச் செலவு ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க, சரக்கு போக்குவரத்து வருவாயை அதிகரிப்பதிலும், குறிப்பிட்ட அளவிலான கட்டணச் சீரமைப்பை செயல்படுத்துவதிலும் ரயில்வேத்துறை கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
===