

ஹைடைக் அரசு மருத்துவமனை
India's First AI Clinic in Noida : இந்தியாவின் அரசு சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை உத்தரபிரதேச அரசு நிகழ்த்தி காட்டி இருக்கிறது. இலவச மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனை, ஹெடெக் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நோயாளிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கிளினிக் இந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் AI கிளினிக்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் (GIMS) தான் ஏ.ஐ. கிளினிக்(AI Clinic in Noida) தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அவர்களால் இணையவழியில் இந்த AI கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டது.
மருத்துவத்துறையில் புரட்சி
உத்தரப் பிரதேசத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மருத்துவத் துறைக்கும் ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஜிம்ஸ் மருத்துவமனையின் 'மருத்துவ கண்டுபிடிப்பு மையத்தின்' (Centre for Medical Innovation) கீழ் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெறும்
AI சார்ந்த மருத்துவத் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் (Startups), தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை நிஜ கால மருத்துவச் சூழலில் பரிசோதித்துப் பார்க்கவும், மேம்படுத்தவும் இது ஒரு தளமாக அமையும்.
மருத்துவக் கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல், நேரடியாக மருத்துவர்களையும் நோயாளிகளையும் சென்றடைவதை இது உறுதி செய்யும்.
நிபுணர்களின் கருத்து
ஜிம்ஸ் இயக்குநர் பிரிகேடியர் டாக்டர். ராகேஷ் குமார் குப்தா கூறுகையில், "இந்த முயற்சி மருத்துவ ஸ்டார்ட்-அப்களுக்குப் புதிய கதவுகளைத் திறக்கும். இன்றைய காலத்தில் இத்தகைய கண்டுபிடிப்புகள் நோயாளிகளுக்கு நேரடியாகக் கிடைப்பது மிகவும் அவசியம்" என்றார்.
மத்திய மருந்துத் துறை இணைச் செயலாளர் அவர்கள் பேசுகையில், "மருத்துவ உபகரணங்கள் மற்றும் AI சார்ந்த தீர்வுகளுக்கு இது ஒரு முக்கிய தேசியத் தளமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச அங்கீகாரம்
ஏஐ மருத்துவமனை தொடக்க விழாவில் இந்தியா மற்றும் லண்டன் (NHS Trust) உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். மேலும், இந்த AI கிளினிக் ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி லக்னோ ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
சிகிச்சை நேரம் குறையும்
இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு மேம்படும். சிகிச்சைக்கான நேரம் குறையும். நோயைக் கண்டறிவதில் துல்லியம் அதிகரிக்கும். சாமானிய மக்களும் அரசு மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சையைப் பெற முடியும்.
ஜனவரி 2-ம் தேதி இணையவழியில் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் நேரடித் திறப்பு விழா (Physical Launch) ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மருத்துவ உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
======