

ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்
India's first indigenous Hydrogen Fuel Cell Passenger Vessel on the sacred Ganga. Zero noise, Zero Emissions new era of inland waterways begins : இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கங்கை போன்ற பெரிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்து மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
வாரணாசியில் அறிமுகம்
இந்தநிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல் (Hydrogen Fuel Cell Vessel) அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேவையை தொடங்கியது
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தூய்மையான மற்றும் நிலையான உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை உறுதி செய்வதில் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சர்பானந்த சோனோவால், ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல்களை இயக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
பசுமை ஆற்றலை நோக்கி இந்தியா
"ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் இந்தக் கப்பல், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களையும், எரிசக்தி மீதான நமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; பசுமை ஆற்றல் மற்றும் உள்நாட்டுத் தீர்வுகளை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்”.
உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து
நமது தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயாராக உள்ளன. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உள்நாட்டு நீர்வழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்று குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை
கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், டீசலுக்கு பதில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவதால் நீராவி மட்டுமே உமிழ்வாக வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாது.
நீர்வழித்தடங்கள் அதிகரிப்பு
மேலும் சத்தம் ஏதுமின்றி அமைதியாக இந்த படகுகள் இயங்கும். கடந்த 10 ஆண்டுகளில், ஐந்திலிருந்து 111 ஆக தேசிய நீர்வழிகள் உயர்ந்துள்ளன. உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து 8 கோடி டன்னில் இருந்து 14.5 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
====