Jantar Mantar : ”டெல்லியின் போராட்டக் களம், அதிகம் உச்சரிக்கும் பெயர்” : 300 ஆண்டு கால பாரம்பரியம் : முழு விவரம்!

டெல்லியில் இருக்கும் ஜந்தர் மந்தர் போராட்டங்கள் நடக்கும் இடமாக அனைவராலும் அறியப்பட்டாலும், 300 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க வானியல் ஆய்வுக் கட்டிடத்தின் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.
Jantar Mantar Delhi  widely known as site for protests, it also stands as an astronomical observatory
Jantar Mantar Delhi widely known as site for protests, it also stands as an astronomical observatoryAI generated
2 min read

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர்

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடம் இன்று பலருக்கும் போராட்டங்கள் நடைபெறும் முக்கிய தளமாகவே அறிமுகமாகியுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுச் சின்னம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் அது கிடையாது.

வானியல் ஆய்வுக் கட்டிடம்

300 ஆண்டுகளுக்கு முன்பு வானியல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடத் தொகுப்பு, இந்தியாவின் அறிவியல் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஜந்தர் மந்தர் - பெயர்க்காரணம்

"ஜந்தர் மந்தர்" என்ற பெயருக்கே தனித்துவமான அர்த்தம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்."ஜந்தர்" என்பது "யந்திரம்" அல்லது "கருவி" என்பதைக் குறிக்கிறது.

"மந்தர்" என்பது "கணக்கிடுதல்", "ஆலோசித்தல்" அல்லது "துல்லியமாக அளவிடுதல்" என்ற பொருளை தருகிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து "கணக்கீட்டிற்கான கருவி" அல்லது "துல்லியமான அளவீட்டு அமைப்பு" என்ற பொருளை வழங்குகின்றன.

எனவே, இந்த இடம் வெறும் கட்டிடமாக இல்லாமல், வானில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வு மையம்.

ஜந்தர் மந்தர் உருவான வரலாறு

18ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரை ஆண்ட மகாராஜா சவாய் ஜெய் சிங் வானியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார்.

அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வானியல் கருவிகள் சிறியதாகவும், துல்லியமான கணக்கீடுகளை வழங்க முடியாததாகவும் இருந்ததாக அவர் கருதினார்.

எனவே, மிகப்பெரிய கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கட்டமைப்புகளைக் கொண்டு நிரந்தரமான வானியல் கருவிகளை உருவாக்க முடிவு செய்தார்.

உருவான ஜந்தர் மந்தர்கள்

1724 முதல் 1730 வரை வட இந்தியாவின் பல பகுதிகளில் ஐந்து ஜந்தர் மந்தர்களை அவர் கட்டியெழுப்பினார்.

ஐந்து வானியல் ஆய்வகங்கள் டெல்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜயினி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டன.

மதுராவில் இருந்த ஜந்தர் மந்தர் பின்னர் அழிக்கப்பட்டதால், இன்று அதன் சுவடுகள் மட்டுமே வரலாற்றில் காணப்படுகின்றன.

பாரம்பரிய சின்னங்கள்

தற்போது டெல்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜயினி மற்றும் வாரணாசியில் உள்ள ஜந்தர் மந்தர்கள் இந்தியாவின் அறிவியல் மரபை எடுத்துக்கூறும் முக்கிய பாரம்பரியச் சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புகழ்பெற்ற ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர்

இதில், ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் மிகவும் பிரபலமானதாகும். அங்கு சுமார் 19 வானியல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரியனின் நிலை, நேரம், கிரகங்களின் இயக்கம், நட்சத்திரங்களின் இருப்பிடம் மற்றும் பருவ மாற்றங்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாக கணக்கிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத் தொகுப்பு 2010-ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலிலும் இடம்பிடித்தது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஜந்தர் மந்தர்

டெல்லியில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் 1724ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகே ஜெய்ப்பூர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன.

டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள மிகப்பெரிய சூரியக் கடிகாரம், வட்ட வடிவ அளவீட்டு கருவிகள் மற்றும் வானத்தின் கோணங்களை கணக்கிடும் அமைப்புகள் அக்கால அறிவியல் திறமையை வெளிப்படுத்துகின்றன.

இன்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை பார்வையிடுகின்றனர்.

அக்காலத்தில் கடல் பயணம், விவசாய கால நிர்ணயம் மற்றும் பஞ்சாங்கத் தயாரிப்பு போன்றவற்றுக்கு இந்தக் கணக்கீடுகள் முக்கிய ஆதாரமாக இருந்தன என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனித்துவம் மிக்க கட்டிடக்கலை

ஜந்தர் மந்தரின் கட்டிடக்கலை உலக கட்டிடக் கலைஞர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரம்பரிய அரண்மனை அல்லது கோவில் வடிவமைப்புகளைப் போல அல்லாமல், முக்கோணம், வட்டம், சாய்வான சுவர், உயரமான படிக்கட்டு போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள

இந்த அமைப்புகள் அறிவியலையும் கலைநயத்தையும் ஒருங்கிணைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இதனால், வானியல் ஆய்வு மையமாக மட்டுமல்லாமல், கட்டிடக் கலைக்கான அரிய எடுத்துக்காட்டாகவும் ஜந்தர் மந்தர் திகழ்கிறது.

கணக்கீடுகளை மேற்கொள்ள முடியவில்லை

இன்று இந்த கருவிகளைப் பயன்படுத்தி பழையபடி துல்லியமான வானியல் கணக்கீடுகளை மேற்கொள்ள முடியாது. காரணம் இந்தப் பகுதியில் ஏராளமான உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.

இதனால், வானத்தை நேரடியாகக் காணும் பார்வைக் கோணம் மாறியுள்ளது. இதனால், அக்காலத்தில் இருந்த துல்லியமான கண்காணிப்பு சூழல் தற்போது இல்லை.

ஆனாலும், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கான வரலாற்றுச் சான்றுகளாக இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

போராட்ட களமாக மாறிய ஜந்தர் மந்தர்

சமீப காலங்களில் டெல்லி ஜந்தர் மந்தர் அரசியல் மற்றும் சமூக போராட்டங்களுக்கான முக்கிய இடமாக இருக்கிறது.

டெல்லியில் அதிகாரப்பூர்வமாக போராட்டங்களை நடத்த இந்தப் பகுதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே உச்சரிக்கும் பெயர் ஜந்தர் மந்தர்

இங்கு நடைபெறும் போராட்டங்கள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் எதிரொலித்தாலும், உண்மையான வரலாறு, அறிவியல் முக்கியத்துவம் பெரும்பாலானோருக்கு தெரிவது கிடையாது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஜந்தர் மந்தர், இன்று வரை இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம், வானியல் ஆராய்ச்சியில் இந்திய மன்னர்கள் கொண்டிருந்த தொலைநோக்கு சிந்தனையை நினைவூட்டும் முக்கிய வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது.

ஒரே இடத்தில் இணைக்கும் நினைவுச் சின்னம்

அறிவியல், கட்டிடக்கலை, வரலாறு மற்றும் சுற்றுலா ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் இந்த அரிய நினைவுச் சின்னம், இன்று பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்களை இணைத்து, போராட்டங்களை முன்னெடுக்கும் அரிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in