
நீதிபதி வீட்டில் தீ, கட்டுக்கட்டாக பணம் :
Justice Yashwant Varma Case Update : டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் எப்படி இவ்வளவு பணம், இதன் பின்னணி குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
பதவி விலக வர்மா மறுப்பு :
இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீதிபதி வர்மா(Justice Yashwant Varma) அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
பதவி நீக்கம் செய்ய பரிந்துரை :
இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க : ஐஏஎஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா? : தலைமை நீதிபதி காட்டம்
விசாரணைக் குழு அமைப்பு :
அதனை ஏற்றுக் கொண்ட அவர், மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து இருக்கிறார். நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை மேல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
===