
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடத்து வரும் நிலையில், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். 2023 தேர்தல் வெற்றியின் போதே, முதல்வர் பதவியை பிடிப்பதில் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது.
முதல்வர் பதவி - மோதும் தலைவர்கள் :
அப்போது தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக பேச்சு எழுந்தது. சித்தராமையா முதல்வராகி 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
எனவே, டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சித்தராமையாவுக்கு எதிர்ப்பு :
காங்கிரஸ் எம்எல்ஏ.வான இக்பால் ஹுசேன், “சித்தராமையாவின் ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. அவருக்கு முன்பு போல அதிகாரம் இல்லை. ஆட்சியை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்” என வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு அமைச்சர் ராஜண்ணா, “இக்பால் ஹுசேன் எம்எல்ஏ கூறியது உண்மைதான். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்''என்று தன் பங்கிற்கு எதிர்ப்பு குரல் எழுப்புகிறார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு :
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்க அக்கட்சின் மேலிடம், பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவை பெங்களூருவுக்கு அனுப்பியது. அவர் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
பெரும்பாலானோர் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும். டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
சித்தராமையா பிடிவாதம் :
ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார். ஆனால் கட்சி எம்எல்ஏக்கள் எதிராக திரும்பி இருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எதைப்பற்றியும் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காக்கும் டி.கே. சிவக்குமார், எப்படி காய் நகர்த்துகிறார்? அவரது திட்டம் என்ன? என்று புரியாமல் சித்தராமையா ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
====