

தலைமை நீதிபதியால் உருவான கரப்பான் பூச்சி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கரப்பான் பூச்சி என்று தெரிவித்த கருத்து இன்று ஒரு கட்சி தொடங்க காரணமாகி விட்டது. வெறும் இயக்கமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி இன்று வலிமையான கட்சியாக, போராட்டத்தை முன்னெடுத்து, மத்திய அரசை அடிபணிய வைத்து இருக்கிறது.
மூன்று கோரிக்கைகளோடு போராட்டம்
நீட் முறைகேடுகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டம், உயிரை பறிகொடுத்த மாணவ, மாணவிகளுக்கு இழப்பீடு என விரிவடைந்து, கடைசியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் வரை வந்து நிறைவுபெற்று இருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவால், மே 12ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகைமை ரத்து செய்தது. பின்னர் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
போராட்டத்தை முன்னெடுத்த அபிஜித் திப்கே
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தால், அமெரிக்காவில் படித்து வந்த அபிஜித் திப்கே என்பவர் ஆன்லைனில் கரப்பான் பூச்சி ஜனதா என்ற இயக்கத்தை தொடங்க, அதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.
தர்மேந்திர பிரதானே இலக்கு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது முதல் போராட்டதை தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்களை, மாணவர்களை ஒன்று திரட்டி வந்தனர்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்
இதற்கு இடையே லடாக்கை சேர்ந்த காந்தியவாதி சோனம் வாங்சுக், தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள்
அதற்கு நாடு தழுவிய ஆதரவு கிடைக்க, கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் மேலும் கூர்மை பெற்றது. 21 நாட்களுக்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்குச்.
அங்கும் போராட்டத்தை தொடர்ந்த அவர், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு 26வது தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சிஜேபி பேரணி, களேபரமான டெல்லி
இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க, நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், பாதுகாப்பு படையினருடன் தள்ளுமுள்ளி, தடையை மீறி பேரணி என களேபரமானது தலைநகர் டெல்லி
ஸ்தம்பித்தது தலைநகர் டெல்லி
போலீஸ் தடியடி, கண்ணீர் புகை வீச்சு, மாணவர்கள் கைது என நாளுக்கு நாள் பிரச்னை வலுக்கு, டெல்லி நகரம் ஸ்தம்பித்தது. இணைய சேவை மட்டுமின்றி, மெட்ரோ சேவையையும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, களத்தில் குதித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து போராட்டம்
தமிழகத்தில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு ஆதரவோடு, நீட் தேர்வு ரத்து என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இளைஞர்கள், மாணவர்கள் ஒற்றுமை வலுக்க வேறுவழியின்றி, கரப்பான் பூச்சி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்திட மத்திய அரசு முன்வந்தது.
மத்திய அரசு வாக்குறுதி
பிரதமர் மோடியும் 2முறை வீடியோ வெளியிட்டு, நீட் முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதா என மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
புதிய மசோதா தாக்கல்
மதோசா உடனே தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புத்தலுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
போராட்டத்தில் புகுந்த அரசியல்
இதற்கு இடையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடத்தப்பட்ட, மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியது.
மத்திய அரசு பேச்சுவார்த்தை
தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நீட் முறைகேட்டால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு, தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் என்ற 3 கோரிக்கைகளோடு, கரப்பான் பூச்சி கட்சியினர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா
கடைசி இரண்டு கோரிக்கைகளை மட்டுமே ஏற்க அரசு முன்வந்ததால், போராட்டம் தொடர்ந்தது. இதனால் வேறு வழியின்றி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
35 நாட்கள் போராட்டம் முடிவு
மூன்று கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால், 35 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை முடித்துக் கொண்டனர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டங்களும் ஓய்ந்தன.
பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு
மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்று இருக்கிறார்.
சீர்திருத்தங்கள் - குழு அமைப்பு
தேசிய தேர்வு முகமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவையும் மத்திய அமைத்துள்ளது. இக்குழுவில் எஸ். சோமநாத் மற்றும் வி. காமகோடி உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கரப்பான் பூச்சி கட்சிக்கு வெற்றியா?
2 மாதங்களில் வலிமையான கட்சி, ஜென் ஜி இளைஞர்களின் ஆதரவு, மாணவர்களின் ஒற்றுமை, முன்னெடுத்த முதல் போராட்டத்தில் பெரிய வெற்றி, 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முதன்முறையாக ஒரு அமைச்சர் ராஜினாமா என கரப்பான் பூச்சி கட்சியினர் இதை வெற்றியாக கருதுகின்றனர்.
மத்திய அரசுக்கு பின்னடைவா?
மத்திய அரசை பொருத்தவரை இளைஞர்களின் எழுச்சி, ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே தான் பிரதமர் மோடியும் முதன்முறையாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டார்.
மாணவர்களை கவர ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
திசை திருப்பிய அரசியல் கட்சிகள்
இன்னொரு புறம், சிஜேபி போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு பிரச்னையை திசை திருப்பி விட்டதாகவே தெரிகிறது. முதலில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்று குரல் கொடுத்த காங்கிரஸ், கடைசியில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அபத்தமான கோரிக்கையை முன்வைத்து, இளைஞர்களை திசை திருப்பி விட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் மீது பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். சோனம் வாங்சுக்கும் போராட்டம் வன்முறைக்கு வித்திடக்கூடாது என்று எச்சரித்தார்.
நீர்த்துப்போன நீ்ட் தேர்வு ரத்து எதிர்ப்பு
நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நீட் தேர்வு ரத்து என்ற குரலே எழுவில்லை என்று சொல்லலாம். தமிழகத்தில் மட்டும் தான் நீட் ரத்து என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது.
தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் பிரதானமாக இருந்தது. எனவே நீட் ரத்து என்பது நீர்த்துப்போய் விட்டது.
ஒரு வகையில் சிஜிபிக்கு வெற்றி, புதிய மசோதாவோடு மத்திய அரசுக்கு தலைவலி முடிந்தது, பெரிய பலனை அறுவடை செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள். என்று 35 நாட்கள் போராட்டம் நிறைவு பெற்று இருக்கிறது என்பது தான் உண்மை.